பக்கம் எண் :

218இலக்கியத் திறன்

Untitled Document

ஓரிரு சொல்லே

    தேர்ந்த புலவர் தாம் கொண்ட கருத்தையும் தாம் உணர்ந்த
உணர்ச்சியையும்   விளக்குவதற்கு  நீண்ட   பல  பாட்டுகளைப்
பாடுவது   இல்லை.  ஒரு   சில அடிகளாலும் அல்லது ஒரு சில
சொற்களாலும் விளக்கும் திறன் அவர்களுக்கு  அமைந்திருக்கிறது;
சில   இடங்களில்   அடையாக   வரும்   ஒரே   சொல்லாலும்
அவருடைய உணர்ச்சியை நாம் பெறுமாறு செய்கின்றார்1

    கடற்கரை ஓரத்தில் தாழை மரம்  ஒன்றைப் புலவர் கண்டார்.
தாழைப் போதுகளின்மேல் முள் உடைய தோடுகள் மூடி இருந்தன
போதுகள் மெல்ல மலரத் தொடங்கின. வெண்ணிறமான மலர்களாக
விரிந்தன. அவற்றின்   மணம்   எங்கும்  பரவியது. கடற்கரையின்
புலால்   நாற்றம்   மாறிவிட்டது.  தாழை மணம் கமழ்ந்தது. இதை
உணர்ந்த   புலவர்,   புலால் நாற்றத்தைப் போக்கிப் பூமணத்தைப்
பரப்பியது  ஒரு  பெரிய வெற்றியாக உணர்ந்தார்.  புலால் நாற்றத்
திற்கும்   பூமணத்திற்கும்   ஒரு   பெரும்போர்  நிகழ்ந்ததாகவும்
முன்னது தோற்றழிந்து  பின்னது  வெற்றி பெற்றதாகவும் கற்பனை
செய்தார். போர்க்களம்  அவருடைய   நினைவுக்கு வந்தது. முள்
நிறைந்த நீண்ட   தோடுகள் வாளேந்திய வீரர்களாக கற்பனையில்
நின்றன.   வீரர்களின்  காவலுக்கு உள்ளே இருந்து வீரம் தோன்ற
மெல்ல வெளியே வந்து பெருமிதத்தோடு போர் செய்து பகைவரை
அழித்து ஒழித்த  ஒரு காட்சியும் அவருடைய நினைவுக்கு வந்தது,
ஆயினும் போர்க்களம் என்றும  வீரர் என்றும்,பெருமிதம் என்றும்,
வெற்றி என்றும் கூறி, அவர்   விரிவாக வருணிக்கவில்லை. காப்ப,
பொருது   என்ற     இரண்டு   சொற்களாலேயே   அவருடைய
கற்பனையும் உணர்ச்சியும் முழுதும் தோன்றுமாறு அமைத்தார்.

      எயிறுடை நெடுந்தோடு காப்பப் பலவுடன்
     வயிறுடைப் போது வாலிதின் விரீஇப்
     புலவுப்பொருது அழித்த பூநாறு பரப்பின்....2


    1. In a single line, sometimes in a single epithet the
poet can flash upon our imagination a picture that shall
seem filled with passionate emotion.

     -C.T. Winchester, Some Principles of Literary
      Criticism, P.135.

      2. அகநானூறு. 130