பக்கம் எண் :

22இலக்கியத் திறன்

Untitled Document

உடனே,   பழையபடி   உணர்ச்சிகள்   தலைகாட்டும்,    ஆகவே,
உணர்ச்சி    அடியோடு இல்லாமல் அடக்கி வாழ்தல் அரிது, அரிது.
உணர்ச்சிகளைக்   குறைத்தல்   இயலும்;   பண்படுத்தல்   இயலும்;
அவ்வளவே அன்றி, அடியோடு ஒழித்தல் இயலாது.

      ஆகவே, உணர்ச்சிகளையும்   அவற்றிற்குரிய கலைகளையும்
வெறுத்து     ஒதுக்குதல்   அறியாமை.   வளர்ந்துள்ள,   வளரும்
உணர்ச்சிகளைப் பண்படுத்த முயல்வதே அறிவுடைமை.

      கலை,    உணர்ச்சிகளை   வளர்த்திட   வல்லது  என்பது
உண்மையே.   புலன்களை நுண்ணுணர்வினவாக ஆக்கி வளர்க்கும்
தன்மை    கலைக்கு   உண்டு.   அதனால்,   சமணர்,  பௌத்தர்
முதலானோர்   கலைகளை   அவ்வளவாகப் போற்றவில்லை. கலை
நுகர்ச்சியால்   புலனடக்கம்   குறைந்து   போகுமோ என அஞ்சிக்
கவலைப்படல் கூடாது. நல்ல கலைகள்  புலன்களை  வளர்ப்பதோடு
பண்படுத்தும் தன்மையும் உள்ளவை.   ஆகவே, விலங்குணர்ச்சிகள்
உடலில்   வளர்ந்துவிடும்   என்று  அஞ்சாமல், உடலில் இயல்பாக
உள்ள   உணர்ச்சிகள்   பண்படும்   என்று   மகிழ்ந்து கலையால்
பயன்பெறல் வேண்டும்.

கலையின் பொறுப்பு

     உணர்ச்சி நிலையில்லாதது ஆயினும், விரைவில் மாறக்கூடியது
ஆயினும், அதுவே அறிவைவிட ஆற்றல்மிக்கதாக உள்ளது. உலகம்
எவ்வளவு   நாகரிகம்   பெற்று   மாறிய  போதிலும், பழங்காலத்து
மனிதர்க்கு   இருந்த  அந்த உணர்ச்சிகளே இன்றைய  மனிதர்க்கும்
உள்ளன.   கபிலர்   கம்பர்   முதலானோரின்  காலத்தை விட நம்
காலத்தில் அறிவு எவ்வளவோ முன்னேறியுள்ள  போதிலும், மாறுதல்
பல அறிவுத்துறையில் ஏற்பட்டுள்ள போதிலும்  உணர்ச்சிகள் மட்டும்
அக்காலத்தில் இருந்தமை போலவே உள்ளன

      பாரியின் பறம்பு மலையிலே நெடுங்காலம் வாழ்ந்தவர் கபிலர்
பாரியின் கெழுதகை நண்பராக விளங்கிய புலவர் அவர். பாரி இறந்த
பிறகு,   அந்த   மலையை   விட்டு   நீங்கி   வெளி  நாட்டுக்குப்
புறப்பட்டார்.    அந்நிலையில்,   மலை   கண்ணுக்குத்  தோன்றும்
வரையில் திரும்பத் திரும்பக்  கண்டு உருகினார்; அதனைப் பற்றியும்,
பாரியோடு    தொடர்புற்றிருந்த   தம்   வாழ்வு பற்றியும் நினைந்து