பாட்டின் சொற்கள் இவ்வாறு வரையறுத்த பொருளை விட்டு நெகிழ்ந்து, குறிப்புப் பொருளையும் தழுவல் பொருளையும் உணர்த்துவதற்குக் காரணம் என்ன? பாட்டின் அனுபவம் எல்லையின்றி விரிவடையக் கூடியது. பல் வகையாக மாறி அமையக்கூடியது. ஆனால் மொழியில் உள்ள சொற்களோ மிகச் சில; அனுபவ வேறுபாடுகள் அத்தனையும் உணர்த்தும் ஆற்றல் இல்லாதவை. ஆகவே, உள்ள சில சொற்களே குறிப்புப் பொருளாலும் தழுவல் பொருளாலும் அனுபவத்திற்கு ஏற்றவாறு விரிவு பெற வேண்டுவனவாக உள்ளன1. சில குறியீடுகளைக் கொண்டு பலவகைப் பொருள்களை உணர்த்துவது போன்ற குறை மொழியின் சொற்களில் இருந்தலால்தான், பாட்டின் சொற்கள் இவ்வாறு அமைகின்றன. சொல் வேட்கை தம் ஆழ்ந்த அனுபவத்தைத் திரும்பக் கொணர்ந்து முழுவதுமாக உணரவல்ல உள்ளம் படைத்தவர்களும், சில வேளைகளில் அந்த அனுபவத்தை வெளியிட்டுரைக்கத்தக்க சொற்கள் கிடைக்காமல் தடுமாறுதல் உண்டு. வோர்ட்ஸ்வொர்த் என்னும் ஆங்கிலக் கவிஞர் குயிலின் சிறப்பியல்பை விளக்கு வதற்கு ஒரு நல்ல அடை தேடிப் பல ஆண்டுகள் முயன்றாராம்: 1802 முதல் 1845 வரை நாற்பத்து மூன்று ஆண்டுகள் கழித்ததாகவும், அந்த அடை வாய்க்காமல் 1802-இல் தாம் எழுதிய அந்தப் பாட்டை 1807, 1815, 1820, 1827 ஆகிய ஆண்டுகளில் திரும்பத்-திரும்பப் படித்துப் பயனின்றிவிட்ட தாகவும் 1845-ல் (wandering voice என்ற) தொடர் கிடைத்த பின்னர் அமைதியுற்றதாகவும் அறிகிறோம். ஆகவே, கவிஞர் தாமே முயன்றாலும் சில தக்க சொற்கள் கிடைக்காமல் வாடுவது உண்டு என்றும், எதிர்பாராமல் சில வேளைகளில் அச் சொற்கள் முன் வந்து நிற்பதும் உண்டு என்றும் அறியலாம். எண்ணிக்கை :முறை புலவர்கள் சொற்கள் பல அறியாதவர்கள் அல்லர். அவர்கள் சொற்கள் பலவற்றையும் வேண்டும்போது எடுத்தாளும் திறன் பெற்றவர்கள். ஆங்கிலப் புலவர் ஷேக்ஸ்பியர் பதினையாயிரம் சொற்கள் தெரிந்தவர் என்றும், மில்டன் எண்ணாயிரம் சொற்கள் 1. I.L. Lowes, Convention and Revolt in Poetry , p.6. |