பக்கம் எண் :

228இலக்கியத் திறன்

Untitled Document

தெரிந்தவர்   என்றும், அவர்களின்   நூல்களிலிருந்து எண்ணிக்
கணக்கிட்டுக் கூறுவர்.  தமிழ்ப்  புலவர்களும் அவ்வாறு ஆயிரக்
கணக்கான சொற்களை  ஆளவல்லவர்களே.  ஆயின், இத்தனை
ஆயிரம் சொற்களை ஆளவல்லவர்கள் என்று அவர்கள் ஆளும்
சொற்களின்   எண்ணிக்கையால்  மதிப்பு உயர்வதில்லை. அந்தச்
சொற்களை ஆளும் முறையாலேயே உயர்ந்து விளங்குகின்றனர்1.

விளக்க வேண்டா

     உணர்த்தும்   திறனைப் பொறுத்த வரையில் இன்னொன்றும்
கவனிக்கத்தக்கது.    புலவர்   தம்   அனுபவத்தைக்   கொட்டிச்
செல்லவேண்டும்,  அல்லது,   வாரி   வழங்க  வேண்டுமே தவிர
இடையிடையே    நின்று   விளக்கங்கள்   கூறிக்கொண்டிருத்தல்
கூடாது.   அது உணர்ச்சிப்  பெருக்கிற்கு இடையே அணை கட்டி
நிறுத்தல்   போன்றதாகும்.   கதையிலும்   நாடகத்திலும்  புலவர்
இடையிடையே நின்று விளக்கம் கூறுவாரானால்,  கற்பனை சிதறிப்
போய்விடும்.   அவ்வாறு   இடையே  விளக்கம் கூறுபவர் சிறந்த
புலவர் அல்லர்* ஓவியக் கலைஞர்,தாம் தீட்டிய ஓவியத்தைப் பிறர்
கண்டு   உணர்ந்து   பயன்  பெறுமாறு  விட்டுவிட  வேண்டுமே
அல்லாது, ஓவியத்தின்  பக்கத்தில் நின்று அதைப் பற்றி விளக்கிச்
சொற்பொழிவு   நிகழ்த்திக்கொண்டிருத்தல்   கூடாது.   அவ்வாறு
செய்தால்,   அது   அவருடைய ஓவியத்திற்கே குறைபாடு ஆகும்.
உணர்த்தும்   திறன்    இல்லாத   ஓவியமாக  அது கருதப்பட்டு,
அவருடைய   கலைக்கு  இழுக்கு வந்து சேரும்.  இலக்கியத்திலும்
உணர்ச்சி யனுபவத்திற்கு  வடிவம் தரும் புலவர், படிப்பவர் அந்த
அனுபவத்தைப்   பெறக்கூடிய   வகையில்   உணர்த்தும்   திறன்
பெற்றவராக இருத்தல்  வேண்டும். இடையிடையே வந்து அறிவாக
விளக்கம் கூறல் உணர்த்தும் திறன் அன்று.


     1. The chief characteristic of Poets is their amazing
command of words.   It is not   the quantity of words a
writer  has   at   his  disposal, but the way in which he
disposes them that gives him his rank as a poet.

       I.A. Richards, Science and Poetry, p.38

     * T.G. Tucker, The Judgement and Appreciation of
       Literature p. 112.