பக்கம் எண் :

உணர்த்தல் 229

Untitled Document

உண்மையான ஈடுபாடு

     முடிவாக   நோக்கின்,  கலைஞரின் உண்மையான ஈடுபாடே
உணர்த்தும்   ஆற்றலுக்கும்   அடிப்படையாகும் எனலாம். அவர்
உண்மையாக ஈடுபட்டிருந்தால்,  அவருடைய   கலை நம்மையும்
அவ்வாறு உண்மையாக   ஈடுபட்டுக்  காணச் செய்கிறது கலைஞர்
உண்மையாக   ஈடுபட்டு   ஒரு   காட்சியைக் கண்டார் என்றால்,
அதற்காக   அவர்   உணர்ந்து மேற்கொண்ட முயற்சியை நாமும்
மேற்கொள்ளுமாறு   செய்கிறது அவர் படைத்த கலை. அவரைப்
பார்த்துப் பின்பற்றித்தான் அந்த முயற்சியை மேற்கொள்ளுகிறோம்
அந்த    முயற்சி   தக்க பயன்   தருமானால், அவருடைய கலை
உயர்ந்தது எனத் தகும்1.  அதாவது,  அவர் பெற்ற அனுபவத்தை
நாமும் பெறச் செய்யுமானால், அது உயர்ந்தது எனலாம்.

     ஆகவே,   கலையனுபவத்தை   உணர்த்தும்   முறை  ஒரு
வகையில் எளிதாகவே உள்ளது எனலாம். கலைஞர்  உண்மையாக
ஈடுபட்டால், பிறரையும்   அவ்வாறு   ஈடுபடுத்த  முடியும். அவர்
உள்ளம் உண்மையாக  நம்பினால் அதைப்பிறருள்ளமும் நம்புமாறு
செய்ய முடியும். அவர்   உண்மையாக  மகிழ்ச்சியில் திளைத்தால்,
பிறரையும் அவ்வாறு திளைக்கச் செய்யமுடியும்.

     இத்தகைய   உண்மையான   ஈடுபாடு   இருந்தால்,  எளிய
சொற்களாலும் அரிய அனுபவத்தை உணர்த்தல் முடியும். உண்மை
இல்லையேல், மிகத் திறமான சொற்களைக் கையாண்ட  போதிலும்
பிறர்க்கு உணர்த்துவது   குறையாகவே   நிற்கும்.  அகத்தெழுச்சி
(inspiration) என்பது இத்தகைய   உண்மையே  என்கிறார் டக்கர
என்பவர்2.

     ஒருவரைக் கவிஞர் ஆக்குவது எது என்ற வினாவிற்கு, கதே
(Goethe) என்னும்   புலவர், "ஓர்   உயர்ந்த  உணர்ச்சி பொங்கி
வழியும் உள்ளமே   ஒருவரைக்   கவிஞர்  ஆக்குவது" என்கிறார்.
அத்தகைய   உண்மை  உணர்ச்சி  வாய்ந்த  உள்ளம்  இருந்தால்
உணர்த்தும் திறன் எளிதாக அமைகிறது.


        1. Sincerity is contagious...  Ifhe has actually seen in the  attempt he has made to   lift   the veil the compelsour
imitation. His work is an   example  which we take as a
lesson.   And the efficacy   of the lesson  is the exact
standard of the genuienness of the work.

     - Henry Bergson, Laughter, p.162
     2. T.G. Tucker,  The Judgement and Apprecition of
Poetry, p. 129