நோக்கத்தோடு இலக்கியம் படைக்கப்படுவதில்லை; தன் நோக்கம் நிறைவேறக்கூடிய வகையில் வெற்றி பெற அமைந்திருக்கும்போது, அந்த இலக்கியம் அழகுபட அமைந்தது என்று நாம் போற்றுகிறோம்1.ஆகையால், அழகையோ இன்பத்தையோ தேடி அமைப்பது இலக்கியத்தின் நோக்கம் எனக் கொள்ளாமல், புலவர பெற்ற விழுமிய அனுபவத்தைப் பிறரும் பெறுமாறு செய்வதே நோக்கம் எனக் கொள்ளல் வேண்டும். உணர்த்தல்: பண்படுத்தல் இதனை உணர்ந்த வட நூலார், தலைவன் ஏவலாளர்க்குக் கூறுதல் போன்றவை அற நூல்கள் என்றும், நண்பர் ஒருவருக் கொருவர் கூறுதல் போன்றவை புராணங்கள் என்றும், காதலர் பேச்சுப் போன்றவை காவியங்கள் என்றும் ஒருவகைப் பாகுபாடு செய்தனர். காதலரின் வாழ்வில், சொற்களைவிட உள்ளத்து உணர்ச்சிகளே ஆற்றல் மிக்கவை என்பதும்,சொற்களால உணர்த் தலைவிடக் குறிப்பால் உணர்த்துதலே மிகுதி என்பதும் தெளிவு இலக்கியம், அதுபோல், ஒழுக்கம் அறம் முதலியவற்றை நேரே சொற்களால் உணர்த்துவதைவிடகற்பனையனுபவத்தின் வாயிலாக உள்ளத்தில் அவை தாமே பதியுமாறு செய்யும் பான்மை உடைய தாக விளங்கவேண்டும். அதுவே அழகுணர்ச்சியுடன் விழுமிய வாழ்வுணர்ச்சியும் கலந்து உணர்த்தும் கலையின் திறனாகும். அறத்தை எடுத்துரைக்கும் முறையால் திருத்துதலை விட, அன்பைப் பெருக்கி உணர்த்தும் முறையால் திருத்துதல் எளிது. அதனால்தான் காவியம் காதலரின் பேச்சுப் போன்றது என்றனர். அன்பு, உள்ளம் திருத்துவதற்கு உரிய அடிப்படை அமைத்து விடுதல் போல், பாட்டு உணர்ச்சியைப் பண்படுத்தி அறநெறிக்கு உரிய அடிப்படை அமைத்துவிடுகிறது. அதனால் பாட்டு உணர்த்தும் முறையே உள்ளத்தைப் பண்படுத்தும் முறையாக அமைகிறது என்பர்*. 1. Literature is not composed in order to be beautiful;we judget it to be beautiful when it has succeeded in its aim. -L. abercrombie, Principles of Literary Criticism, p.45. * I.A. Richards, Principles of Literary Criticism, p.61. |