பக்கம் எண் :

236இலக்கியத் திறன்

Untitled Document

                       9.நுகர்தல்

மனத்தின் இயல்பும் பயிற்சியும்

     இனிமையான    குழலிசை   கேட்கின்றது; சிலர்  அதைக்
கேட்டும்     கேளாதவர்கள்     போல்     வேறு    பேச்சில்
ஈடுபட்டிருக்கின்றனர்; சிலர் அதைக் கேட்டு  உருகி நிற்கின்றனர்;
வேறு சிலர்   அந்தக்   குழலிசை   நின்ற பிறகும், சிறிது நேரம்
வரையில்   முன்   போலவே   மனம்   ஒன்றுபட்ட  நிலையில்
அமைதியாக    இருந்து,   பிறகு  பெருமூச்சு விடுகின்றனர். இவ் வேறுபாட்டிற்குக் காரணம் என்ன?

     நாடகத்தில் மிக உருக்கமான துயரக்காட்சி ஒன்று வருகிறது.
காண்பவர்களில்    சிலர்   எப்போதும்  போல்  கவலையின்றிப்
பார்த்தபடி     இருக்கிறார்கள்.   சிலர்   வாடிய   முகத்தோடு
பார்க்கிறார்கள்   சிலர்   மனம் நெக்குருகியவர்களாய்க் கண்ணீர்
விட்டுக் கலங்குகிறார்கள். இவ்வேறுபாட்டிற்குக் காரணம் என்ன?

      இசை   நாடகம்  முதலிய கலைகளில் ஈடுபடுவதற்கு ஏற்ற
உணர்ச்சியை இயற்கையாய்ப்பெற்றிருத்தலும் உண்டு;  பயிற்சியால்
வளர்த்திருத்தலும் உண்டு. இயற்கையாலும் பயிற்சியாலும்  மக்கள்
பலவாறு      வேறுபடுகிறார்கள்.     அதுவே     மேற்குறித்த
வேறுபாடுகளுக்குக் காரணம் ஆகும்.

     பாட்டை   நுகர்வதிலும்   கதை  முதலியவற்றைப் படித்து
நுகர்வதிலும்    இத்தகைய   வேறுபாடு   உண்டு.   கதையைப்
படிக்கும்போதே   கதை மாந்தரின் இன்ப துன்பங்களை எல்லாம்
தாம் அடைந்து,கதைமுடிந்த பிறகும் ஒருநாள் இருநாள் வரையில்
கதையின்   உணர்ச்சிவயமாய்  இருப்பவர்கள் உண்டு. அவ்வாறு
அல்லாமல்,அன்று காலை வந்த செய்தித்தாளைப் படித்து அடுத்த
கடமைகளை    நோக்குபவர்   போல்,   உணர்ச்சி   இல்லாமல்
கதையைப்   படித்துச்   சிறிதும்  மனம் அசையாமல் கலங்காமல்
புத்தகத்தை   மூடி   மறப்பவர்களும்  உண்டு. பாட்டைப் படித்து