பக்கம் எண் :

நுகர்தல் 237

Untitled Document

நுகர்வதிலும் இவ்வாறு  வேறுபடுவோர் உண்டு. வரலாறு படிப்பது
போல் பாட்டைப்   படித்து   முடிப்பவர்களும் உண்டு; பாட்டின்
உணர்ச்சியில் ஈடுபட்டுத்  திரும்பத் திரும்ப  அதில் திளைப்பவர்
களும் உண்டு. இந்த வேறுபாட்டிற்கெல்லாம் காரணம், மேற்கூறிய
அவரவர்களின்   மனத்தின்   இயற்கை   வேறுபாடும்   பயிற்சி
வேறுபாடுமே ஆகும்.

புதுமையின்பம்

     கலையை   நுகரும்   திறன்   உடையவர்களுக்குப் பாட்டு
என்றும் புதுமையின்பம் நல்க வல்லது. எவ்வாறு எனின், பாட்டுக்
கலைமனத்தின் உயர்ந்த நிலையிலிருந்து பிறந்தமைந்தது. மனமோ,
எவ்வளவு   பழகிய பின்னும்  அளந்து  அறிய முடியாத ஆழம்
உடையது;   அறிய அறிய   மேலும்  ஆர்வம்  ஊட்ட வல்லது.
அத்தகைய மனத்தின் உயர்நிலையிலிருந்து பிறந்தமைந்த பாட்டும்
என்றும்   வளம்   சுரந்து  விருந்து நல்க வல்லது. பழகப் பழக,
இன்பத்தின் பரப்பையும்  துன்பத்தின் ஆழத்தையும் மேன்மேலும்
விளக்கவல்ல   புதுமைத்திறன்  பாட்டுக்கு   உள்ளது.  ஆதலின்
அறிந்து கொண்டோம் என்று அதை ஒதுக்கும் நிலை கற்பவர்க்கு
ஏற்படுவதில்லை;    மேலும் மேலும் உணர்த்தும் என்று விரும்பி
நாடும் நிலையே உள்ளது.

      நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
     பண்புடை யாளர் தொடர்பு1


என்று திருவள்ளுவர் குறித்த நயம் அத்தகைய இலக்கியத்துக்கே
உள்ளதாகும்.     அதனால்தான்,  பற்பல   நூற்றாண்டுகளாகப்
பாட்டுநூல் நிலைத்து  வாழ முடிகின்றது; தலைமுறை தலைமுறை
யாகக் கற்றவர்  அந்நூலைத் திரும்பத் திரும்பக் கற்றும் புதுமை
யின்பம் எய்த முடிகின்றது.

நுகரும் தகுதி

     அவ்வாறு   நவில்தொறும்  நயம் பயத்தல் வல்ல பாட்டை
இன்னஇன்ன முறைப்படி படித்து நுகர வேண்டும் என்று வழிகள்
கூறிச் செல்லலாம்.ஆயினும், ஒருவர் இவ்வகையில் முன்னேறுவது,


     1. திருக்குறள். 783,