பக்கம் எண் :

24இலக்கியத் திறன்

Untitled Document
கலையின்   பொறுப்பு மிகுதி எனலாம்;  அதனாலேயே டிகுவின்சி
என்னும்   ஆசிரியர்,   மற்ற   நூல்களை  அறிவுநூல்கள் என்று
கூறிவிட்டு      இலக்கியங்களை   ஆற்றல்    நூல்கள்   என்று
குறிப்பிட்டார்.

உரிப்பொருள்

     புறத்தே     உள்ளபொருள்கள் வாழ்க்கையை அவ்வளவாக
மாற்றியமைப்பதில்லை   என்பதையும்,     அகத்து உணர்ச்சிகளே
பெரிதும்   மாற்றியமைப்பன   என்பதையும்   தமிழ்  முன்னோர்
தெளிந்திருந்தனர்.     அதனால்   நிலம்பொழுது   என்பவற்றை
முதல்பொருள்   என்றும், தெய்வம் உணவு விலங்கு  பறவை மரம்
முதலிய   உணர்ச்சிக்கு   உரியவற்றை உரிப்பொருள் * (இலக்கியத்
துக்கு உரியபொருள்) என்று சிறப்பித்தனர்.

     ஆகவே நன்றாக வாழ விரும்புவோர்.அறிவியல் துறையிலும்
பயின்று,   கலைத்   துறையிலும்  பயின்று, அறிவும் உணர்ச்சியும்
பண்பட்டு   விளங்க   வேண்டும்.    ஆயின்,   இரு துறையிலும்
பயிலுவதற்குரிய   முறைகள்   வேறு    வேறு. நடப்பதற்கு உரிய
முயற்சி வேறு;  நீந்துவதற்கு உரிய  முயற்சி வேறு; நிலத்தில் நீந்த
முயல்வதில் பயன் இல்லை; நீர்மேல்  நடக்க  முயல்வதிலும் பயன்
இல்லை.(அம் முயற்சிகள் மற்றவர்களை  மருட்டும் வித்தைகளாகச்
சிறிது   பயன்படலாம்;     நிலைத்த   பயனும் பண்பாடும் தாரா.)
கற்பனையுணர்ச்சியோடு,   அறிவு  நூல்களைக்   கற்பதில்  பயன்
இல்லை.   அறிவின்   நுணுக்கத்தோடு   கலைச்   செல்வங்களை
நாடுவதிலும்   பயன்  இல்லை. எதை எவ்வாறு கற்றுப்  பயன்பெற
வேண்டுமோ    அவ்வாறு   கற்றல்   வேண்டும்.   கற்கும்போது
அறிவியலுக்குக்   கூரிய   அறிவு வேண்டுவது போலவே  கலைத்
துறைக்குப்     பண்பட்ட   உணர்ச்சி   வேண்டும்.    கலையோ
பலவகைப்படும்.    ஒவ்வொரு  கலையையும்   ஒவ்வொரு முறை
கொண்டு   நுகர்தல்   வேண்டும். ஆகவே கலையின் வகைகளும்
நுகரும் முறைகளும் இன்னின்ன என்று உணர்தல் வேண்டும்.

      *தொல்காப்பியம், பொருள், அகத்திணையில்,3,5,14,18.