Untitled Document 2.கலைகள் அழகுக் கலைகள் கலை பலவகைப்படும். ஓவியம், சிற்பம், இசை, இலக்கியம், நாட்டியம், நாடகம் ஆகியவை கலைகள் என்று போற்றப்படுவன. மேற்குறித்தவற்றை நுண்கலைகள் (Fine arts) அல்லது கவின் கலைகள் (aesthetic arts) என்று குறிப்பது உண்டு. ஏன் எனில், சமையல்கலை, தையற்கலை. அச்சுக் கலை முதலிய பெயர்களால் வழங்கப்படுவனவும் உள. அவற்றிற்கு உணர்ச்சியும் கற்பனையும் தேவை இல்லை. எனினும் அவை கலை என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. கலை அறுபத்து நான்கு வகைப்படும்* என்று முன்னோர் வழங்கிய வழக்கும் உள்ளது கற்றற்கு உரியவற்றை எல்லாம் கலை என்ற சொல்லால் வழங்கும் முறை அது. ஆயின், உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவியம் முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும். இவ்வேறு பாட்டைத் தெளிவாக்கும் நோக்கம் கொண்ட அறிஞர் கவின்கலைகள், அழகுக் கலைகள் நுண்கலைகள் என்ற பெயர்கள் வழங்குவாராயினர்.
அமையும் வகை
ஓவியம், சிற்பம், இசை, இலக்கியம், நாட்டியம், நாடகம் ஆகிய யாவும் உணர்ச்சியும் கற்பனையும் நிறைந்தவை; அழகும் இன்பமும் அளிப்பவை. ஆயினும் இவற்றிற்குள் வேறுபாடுகள் உண்டு. இவை அமைவதற்கு உரிய பொருள்கள் வெவ்வேறு; அமையும் முறையும் வெவ்வேறு. ஓவியம் கீற்றாலும் வண்ணத்தாலும் அமைவது; கண்ணால் நுகரத்தக்கது ; அகலம் நீளம் என்னும் இரண்டு அளவுகள் உடையது. * ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை. | |
|
|