மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக் கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி! கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி1 என்ற பாட்டைப்படித்தவுடன் சொற்களுக்குப் பொருள் புலனாகும் மருங்கு - பக்கம், வண்டு - வண்டு, சிறந்து - நன்றாக, ஆர்ப்ப- ஒலி செய்ய என்று சொல்தோறும் வேறொரு சொல் தோன்றும் முறையைப் (பதவுரை முறையை) இங்குக் குறிப்பிடவில்லை. இந்தச் சொற்களை உணர்ந்தவுடன், பக்கத்தே வண்டுகள் பலவாய்க் கூடி மிக்க ஒலி எழுப்பும் காட்சியை மனம் காண வேண்டும். அடுத்தாற்போல் 'அழகிய பூக்களாகிய ஆடையைப் போர்த்துக்கொண்டு' என்று சொற்களுக்கு ஈடாக வேறு சொற்கள மூளையில் தோன்றாமல், மனக்கண்ணில் காவிரி நீரின் மேல் பூக்கள் ஆடைபோல் போர்த்திருக்கும் காட்சி தோன்றவேண்டும். கருநிறமான கயல் மீன்களாகிய கண்கள் விழித்துச் சாய்ந்து நடந்தாய் என்ற சொற்கள்அல்லாமல், காவிரியாற்றில் அங்கங்கே கருநிறமான கயல் மீன்கள் கண்கள் போல் தோன்ற, அந்த கயல்கள் பிறழும் ஒளி கண் திறந்து இமைப்பதுபோல் தோன்ற வேண்டும். காவிரியாறு செல்வது, அசைந்தசைந்து ஒரு பெண் நடப்பதுபோல் தோன்ற வேண்டும். 3. மேலே சொற்களோடு தொடர்புற்றுப் பொருள்கள் மனக்கண்ணில் தோன்றின. இந்த மூன்றாம் நிலையில், அந்தத் தொடர்பு இல்லாமலே மனக்கண்ணில் அந்தக் காட்சி புலப்பட வேண்டும். சொற்கள் சொற்களாக ஒலிக்கும் நிலை மாறி, அந்தப் பொருள்களே மனக்கண்ணில் தோன்றி, நாடக மேடையில் காண்பது போல், ஓவியத்தில் காண்பது போல் விளங்க வேண்டும். 1. சிலப்பதிகாரம், கானல்வரி. 25 |