குழந்தையின் ஓவியத்தை முதலில் காணும் போது,இது திரை, இது வண்ணம் என்ற எண்ணமெல்லாம் ஏற்படும்.ஓவியத்தின் அழகியல் ஈடுபடும்போது, திரை வண்ணம் கோடு முதலிய எண்ணங்கள் எல்லாம் மறைந்து, இது குழந்தையின் நை, இது கால், இது கண், இது கன்னம் என்ற உணர்வு பிறப்பது போன்ற நிலை இது, நாடகத்தில் தொடக்கத்தில் கோவலனாக நடிப்பவர் இன்னார், கண்ணகியாக நடிப்பவர் இன்னார் என்று நடிகரைப் பற்றிய எண்ணமெல்லாம் வரலாம்; ஆனால் உருக்கமான காட்சியைக் காணும்போது, அந்த நடிகரை மறந்து கற்பனையுலகில் சென்று அவர்களின் துன்பத்தை உணர்ந்து உள்ளம் உருகிக் கண்ணீர் விடுதல் போன்ற நிலை இது. இந்நிலையில் மேற் குறித்த பாட்டின் சொற்கள் ஒரு வகையாக நீங்கி, காவிரியாறு ஒரு பெண்போல் அசைந்தசைந்து நடக்கும் காட்சி மட்டும் மனக்கண்ணில் தோன்ற வேண்டும். வண்டுகளின் ஒலி அந்தப் பெண்ணின் காற்சிலம்பின் ஒலியாகவும் கைவளையின் ஒலியாகவும் கேட்க வேண்டும். மலர்கள் பல நிறமாய்ப் பரவிய காட்சி, அந்தப் பெண் உடுத்திய ஆடையின் வண்ணங்களாகத் தோன்ற வேண்டும். கயல்கள் பிறழ்வது அந்த நங்கையின் கண்கள் இமைப்பதாய்த் தோன்ற வேண்டும். 4. காவிரியாற்றைப் பற்றியும், இளம் பெண்களின் வளையொலி சிலம்பொலி ஆடையின் வண்ணம் பார்வையின் அழகு அசைந்து நடக்கும் நடையழகு முதலியவற்றைப் பற்றியும் இதற்குமுன் வாழ்க்கையிலும் பாட்டுகளிலும் பெற்றுள்ள அனுபவங்கள் உண்டு. அவை பற்றிய நினைவுகள் இப்போது இந்தப் பாட்டின் அனுபவத்தோடு சேர்ந்து நிற்கும். இது நான்காம் நிலை. 5. மனக்கண்ணில் மேற்குறித்த காட்சியைக் கண்டதாலும், அந்தக் காட்சியைக் காட்டிய பாட்டின் ஒலி நயத்தாலும் உள்ளத்தே ஏற்படும் உணர்ச்சி; இது ஐந்தாம் நிலை: 6. அந்த உணர்ச்சியால் விளையும் மனநிலை: இதுவே பாட்டின் அனுபவத்தை முழுமையுறச்செய்யும் ஆறாம் நிலை. பாட்டைப்படிக்கும் அப்போது ஏற்படும் உணர்ச்சி மட்டும் போதாது. அதற்குப் பிறகு மனம் பெறும் நிலையே சிறப்பானது. அதுவே கலையின் அனுபவத்தைப் பயனுள்ளதாகச் செய்வது. சில |