சொற்களில் சில அடிகளில் மிக்க உணர்ச்சி தோன்றலாம்; உடனே மறையலாம்; உள்ளத்தில் ஒரு சுவடும் காணா வகையில் உணர்ச்சி மறைந்து விட்டிருக்கலாம். அதனால் பயன் இல்லை. நொடிப் பொழுது நின்று மறையும் உணர்ச்சி எவ்வளவு சிறந்த உணர்ச்சி யாயினும் பயன் இல்லை. அதனால் என்ன மனநிலை விளைந்தது என்பதே கருதத்தக்கது.1 மேலே காட்டிய பாட்டைப்படித்தபின், காவிரியாற்றினிடம் அன்பும், சோழனுடைய செங்கோலிடம் மதிப்பும் விளைந்தது என்றால், அதுவே அனுபவ நிறைவு எனலாம். வரலாறு முதலியன 'புலவரின் வாழ்க்கை வரலாறு, காலம், அக்காலத்து நாட்டு நிலை முதலியவற்றை அறிதல் வேண்டுமா? எந்த அளவிற்கு வேண்டும் என்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபடுகின்றனர். பாட்டைப் படிப்பதற்கு முன்பு அவற்றைச் சுருக்கமாக அறிதல் போதும். இன்ன அளவிற்கு என்று வரையறுத்துக் கூறுதல் இயலாது. பாட்டின் உணர்ச்சி புலப்படுமளவிற்கு அவை பற்றி அறிதல் போதும் என்று கூறலாம். பாடியவரைப் பற்றி ஒன்றுமே அறியாமல், பாட்டு அவருடைய உள்ளத்தின் உணர்ச்சியைத்தரல் வேண்டும் என்றும்4 அவ்வாறு உணர்ச்சியூட்ட வல்ல பாட்டே சிறப்புடையது என்றும் சிலர் கூறுவர். புலவர் சிலருடைய வாழ்க்கை வரலாறு தெரியாமலே அவர்களின் இலக்கியங்களைக் கற்று மகிழ்கிறோம். 1. It is not the intensity of the conscious experience, its thrill its pleasure,or its poignancy which give its value, but the organisations of its Impulses for freedom and fullness of life. There are plenty of ecstatic instants which are valueless; the character of consciousness at any moment is no certain sign of the excellence of the impulses from where it arises. It is the most convenient sign available but it is very ambiguous and may be very misleading. -I.A.Richards, Principles of Literary Criticism. p. 132. |