அவன் கூறிய கால எல்லை முடியும் தறுவாயில், காதலியின நெஞ்சம் அவனுடையவரவை நினைந்து ஏங்குகிறது. பிரிந்து சென்றவரிடமிருந்து ஒரு செய்தியும் வரவில்லையே என்று கவலையுறுகிறாள்.ஒரு நாள் மாலையில் அந்த வேங்கை மரத்தின் அடியில் நின்றவாறே காதலனை நினைந்து ஏங்கிக் கொண்டி ருக்கிறாள். அவளுடைய கண்கள் அவன் சென்ற திசையையே நோக்கியவாறு உள்ளன. அந்தத் திசையிலிருந்து பறவைகள் சில பறந்து வந்தன. அவை வேங்கை மரத்தில் உட்கார்ந்தன. அப்போது காதலியின் நெஞ்சம் பிரிவாற்றாமையால் மிக வருந்து கிறது. பின்வருமாறு எண்ணுகிறது: "பிரிந்தவர் எனக்கு ஒன்றும் சொல்லியனுப்பவில்லை. என்னை மறந்தாலும் மறந்து போகட்டும். அவர் இரவில் பல நாள் என்னை நாடி வந்த போதெல்லாம் அவருக்கு உற்ற துணையாக இருந்த இந்த வேங்கைமரத்திற்காவது ஒரு செய்தி அனுப்பலாமே. இதோ, அவர் சென்ற திசையிலிருந்த இந்தப் பறவைகள் பறந்து வருகின்றனவே இவைகளிடமாவது செய்தி சொல்லியனுப்பலாமே. இந்தப் பறவைகளுக்கும் மரத் துக்கும் உறவு உண்டு என்பதை அவர் அறிவார். மனிதரிடத்தில் செய்தி சொல்லியனுப்ப மனம் இல்லா-விட்டாலும், பறவை இடத்திலாவது சொல்லியனுப்பலாமே. அதையும் மறந்து விட்டாரோ?" நமக்கொன்று உரையா ராயினும் தமக்கொன்று இன்னா இரவின் இன் துணையாகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ துறத்தல் வல்லியோர் புள்வாயத் தூதே1. வேங்கை மரம் காதலனிடமிருந்து செய்தி எதிர் பார்க்கவில்லை. காதலனும் வேங்கை மரத்தை நினைந்து செய்தி அனுப்பப் போவதில்லை. மரத்திற்கு அனுப்பத் தக்க செய்தியும் இல்லை. செய்தி இருந்து அனுப்பினாலும் பறவைகள் சொல்லப்போவதும் இல்லை; மரம் உணரப் போவதும் இல்லை. இவ்வளவும் அறிவுக்குத் தெரிந்தவை. ஆயினும் கற்பனையுணர்வு, அந்த அறிவைத் தூங்கச் செய்து, காதலியை இவ்வாறு ஏங்கச் செய்கிறது. இந்தக் கற்பனையில் அறிவுடைமை தோன்றவில்லை; ஒரு வகை அறியாமை தோன்றுகிறது. அதுவும், குழந்தையிடம் காணப்படும் அறியாமையாக உள்ளது. இத்தகைய அறியாமை 1. குறுந்தொகை, 266 |