அவர் உணர்ந்த அந்த உணர்ச்சிகளே உடைய மாந்தராக அவர்களைக் காணவேண்டும். மனம் ஒரு நாடக மேடை ஆக வேண்டும் என்றும், கற்பனை மாந்தர் அனைவரும் மனம் என்னும் அந்த அரங்கில் வந்து வந்து போக வேண்டும் என்றும், நாம் அந்தக் கற்பனையில் மூழ்கி அதன் காட்சிகளில் திளைக்க வேண்டும் என்றும் கூறுவர்1. உள்ளம் உயர்தல் தென்றலிலும் நிலவிலும் உடல் குளிர்ச்சியுறுதல்போல், சான்றோரின் சூழலில் உள்ளம் உயர்ந்து நிற்றல் போல், நல்ல இலக்கியம் பயில்வதால் உள்ளம் பெறும் பயன் உண்டு. உள்ளம் விரிவடைந்து தூய்மையும் பெற்று நிற்குமாறு இலக்கியம் செய்கிறது; வாழ்வு பற்றிய விழுமிய உணர்ச்சி பெற்று உள்ளம் உயர்வு பெறுகிறது. சிறந்த துன்பியல் நாடகம் ஒன்றைக் காணும்போது, நம் உள்ளத்தில் ஒதுங்கிக் கிடக்கும் தாழ்ந்த சிறிய உணர்ச்சிகள் எல்லாம் பறந்தோடுமாறு, விழுமிய உணர்ச்சிகள் உள்ளத்தில் இருக்கின்றன; அவற்றால், நாடகத்தைப் படைத்த கலைஞரின் உள்ளம் அப்போது உயர்ந்து நின்ற அளவிற்கு நம உள்ளமும் உயர்ந்து நிற்கிறது2.புலவர் தம் வாழ்வுணர்ச்சியைப் பண்படுத்திக்கொள்வதற்குப் பயன்படுவது பாட்டு; படிப்பவர் அத்தகைய விழுமிய உணர்ச்சியைப் பெறுவதற்கு வாய்ப்பளித்து உலகத்தை உயர்த்துவது பாட்டு; இந்த இருவகைப் பயனும் தருவதே பாட்டின் பெற்றி என்பர்3. 1. Your mind should become a stage on which the characters come and go; you should become absorbed in your book, lost in the scenes it creates...P.H.B. Lyon, The Discovery of Poetry.p. 26 2. When you see a supreme example of tragedy, the emotions it arouses sweep awayall the petty baser instincts, and for a moment you rise to the stature of man as he was meant to be, and as the poet was when he gave his vision form and expression. -P.H.B. Lyon, The Discovery, of poetry p.124 3. To heighten the Poet's consciousness of life, and to enrich the blood of the world by offering to his readers opportunities of conscious living... are the twofold function of poetry. -G. Buch, The Social Criticism of Literature, p.38 |