கோவை இப்படி அமையவேண்டும் என்றும், பிள்ளைத் தமிழ் இவ்வாறு இருக்க வேண்டும் என்றும் பரணி முதலியன இன்ன இன்ன முறைப்படி அமையவேண்டும் என்றும் ஆராய்ந்து கூறுவதே இலக்கிய ஆராய்ச்சியாக இருந்து வந்துள்ளமை காணலாம். அவ்வாறு விதிகளும் முறைகளும் வகுக்கப் பெற்றபின் அவற்றைக் கண்மூடிப் பின்பற்றத் தொடங்கி, இலக்கிய வளர்ச்சி இலக்கிய ஆராய்ச்சி இரண்டிலுமே தேக்கம் ஏற்பட்டது. இடையே, இன்ன இன்ன அணிகள் இவ்விவ்வாறு அமைய வேண்டும் என்றும், முதல் எழுத்து பாட்டுடைத் தலைவனுடைய பெயர் சாதி முதலியவற்றிற்கேற்ப இவ்வாறு அமையவேண்டும் என்றும். முதல் சொல் இப்படி இருத்தல் வேண்டும் என்றும் வீணான விதிகள் வகுக்கப்படலாயின. ஆகவே, தொல்காப்பியனாருக்கு பின் வந்தவர்கள், அவர் வகுத்த நெறிகொண்டு மேலும் உண்மைகள் கண்டு உயர்வதற்கு மாறாக, வழுக்கி விழுந்து இடர்ப் படுவாராயினர். ஆயின், சாக்ரடீஸ் வழி வந்த பிளாட்டாவும் அவரைவிட அவருடைய மாணவர் அரிஸ்டாட்டில் என்பவரும் இலக்கிய ஆராய்ச்சித் துறையில் விதைத்த வித்துக்கள் பழுது படாதவாறு, பின் வந்தவர்கள் வழிவழியே வளர்த்துப் போற்றி யுள்ளனர். வடமொழியிலும் காவிய தர்சம் எழுதிய தண்டி என்பவரும் பிறரும் ஓரளவு இலக்கிய ஆராய்ச்சித் துறையை வளர்த்துள்ளனர். எனினும், சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் ஆங்கில அறிஞர்கள் இத்துறையில் செய்துள்ள முயற்சியே சிறப்புற்று விளங்குகிறது எனலாம். குற்றமும் குணமும் நூல், முதல்நூல், வழிநூல் சார்புநூல் என மூவகைப்படும் என்றும், அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்குமே நூலின் பயன் ஆவன என்றும், எழுவகை மதங்களும் பத்து அழகும் முப்பத்திரண்டு உத்தியும் அமைந்து பத்துக் குற்றங்களும் நீங்கியதாக நூல் விளங்கல் வேண்டும் என்றும் முன்னோர் கருதினார்*. நூலின் புகத்தகாத குற்றம் இன்னவை என்றும் அமையத் தக்க அழகுகள் இன்னவை என்றும் முன்னோர் தந்த விளக் கங்கள் இன்றும் போற்றத்தக்கன. பத்துக் குற்றங்களாவன:- * நன்னூல்; 4-14 |