விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்து ஆகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே.** சொல்வதைச் சுருங்கச்சொல்லுதல், சுருங்கச் சொல்லிய போதிலும் கற்பவர்க்கு விளங்குமாறு அமைத்தல், கற்பவர்க்கு இனிமை பயக்குமாறு அமைத்தல், நல்ல சொற்களை அமைத்தல், இனிய ஓசை உடையதாக அமைத்தல். பொருளாழம் இருக்குமாறு அமைத்தல், பொருளை முறைப்படவைத்தல், உலகத்தோடு (உலகமரபோடு) மாறுபடாதிருத்தல், உயர்ந்த பயன் தருமாறு செய்தல், விளக்கத்திற்கு ஏற்ற உதாரணங்களை அமைத்தல் ஆகியவற்றை அழகு என்று போற்றி நூல் இயற்றினர். . ஒரு குறை ஒரு நூலைக் கற்பவர் அதன் குணங்களையும் நாடிக் குற்றங்களையும் நாடி அவற்றுள் மிகை நாடிச் சீர்தூக்குவது இயல்பு. நூலுக்கு விளக்கம் எழுதும் உரையாசிரியர் அல்லது ஆய்வாளரும், அவ்வாறே குணம் குற்றம் இரண்டையும் காட்டிச் சீர்தூக்குவது இயல்பு. ஆயின், இந்த முறை ஆங்கிலம் முதலிய பிறமொழிகளின் இலக்கியத் துறையில் உண்டே தவிர, தமிழ் இலக்கியத் துறையில் இல்லை. சிறந்த நூல்கள் என்று அறிஞர்கள் போற்றும் சேக்ஸ்பியர் நாடகங்களைப் பற்றி விளக்கம் எழுதுவோரும், குறைகள் இன்ன இன்ன குணங்கள் இன்ன இன்ன என்று எடுத்துக்காட்டுவதை ஆங்கில இலக்கியத் துறையில் காண்கிறோம். தமிழிலோ, சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் அதற்கு இடம் இல்லை. சிறந்த நூல் என்று போற்றப்படுகின்ற எந்த இலக்கியத்திலும் குற்றம் காணும் உரிமை எவருக்கும் இல்லை. ஏதேனும் குற்றம் போல் தோன்றினும், கற்பவர் அதைத் தம் அறியாமை என்று உணர்ந்தாரே தவிர, நூலாசிரியரின் குற்றம் என்று உணர்ந்ததில்லை. அந்த நூலுக்கு உரை எழுதும் உரையாசிரியரும் அதைக் குற்றம் என்று எடுத்துக்காட்டாமல், அதற்கு மாறாகக் குணம் என்றே நிறுவ முயன்றார். அவ்வாறு நிறுவுதற்கு உரிய காரணங்களைக் கண்டு கூறுதலே உரை யாசிரியரின் கடமையாக இருந்தது. முதல் நூலின் ஆசிரியர் குற்றம் அற்றவர் என்று கொண்டிருந்த மரபே அதற்குக் காரணம் ஆகும். சிதைவில என்ப முதல்வன் கண்ணே* ** நன்னூல், 13 * தொல்காப்பியம் பொருள், மரபியல்.107. |