பக்கம் எண் :

ஆராய்ச்சி 261

Untitled Document

ஆய்வு வகை

    இலக்கிய ஆராய்ச்சியில் நடுநிலையாக நின்று கலைப்பண்பும்
திறனும்   கண்டு  ஆராய்வது   நேர்மையான ஆராய்ச்சியாகும்
(Standard or normal criticism).   அவ்வாறு    அன்றி மனம்
போன போக்கில்   விருப்பு   வெறுப்பின்   எல்லையில் நின்று
கருத்துக்   கூறுவது   தவறான   ஆராய்ச்சியாகும். (erratic or
eccentric criticism)   நூல் எழுந்த காலத்தை ஒட்டி வரலாற்று
முறையில்     ஆராய்வதும்    (historical criticism)   உண்டு.
ஆசிரியரின்   வாழ்க்கையை ஒட்டி ஆராய்வதும் (Biographical
criticism) உண்டு.   இலக்கியத்திற்கென்று மரபுகளும் விதிகளும்
வகுத்துவிட்டு   அவற்றின்படி  இலக்கியம் அமைந்திருக்கின்றதா
என ஆயும் விதிவழு ஆராய்ச்சி(dogmatic criticism) தமிழிலும்
வடமொழியிலும்   நெடுங்   காலமாக  இருந்து வந்தது. அதற்கு
மாறானபுது முறை இன்று வளர்ந்துள்ள உணர்ச்சிவழி ஆராய்ச்சி
(neo-criticism or impressionistic criticism) ஆகும்.

கண்டுணர்முறை

     இலக்கியம்   என்பது  நெல்லும் வரகும் போன்றது அன்று.
ஒரே வகையான   அளவு   கருவிகள் வைத்துக்கொண்டு,  நெல்
இவ்வளவு வரகு இவ்வளவு  என்று கூறலாம். ஆயின் இலக்கியம்
வளரும் பயிர் போன்றது;   அளவுகருவிகள்  கொண்டு அளந்து
மதிப்பிட முடியாதது.  சில   நூல்களைப்  படித்துவிட்டு, அவை
களைக் கொண்டு   சில விதிகள் வகுத்துக்கொண்டு ஓர் இலக்கி
யத்தை அளந்து,   அதை   இயற்றியவரின் தரத்தை மதிப்பிடும்
ஆராய்ச்சி  (judicial criticism)   போற்றப்   படாத  காரணம்
அதுதான். சேக்ஸ்பியர்   நூல்களையும் காளிதாசர் நூல்களையும்
படித்துவிட்டு,   அவை   உணர்த்தும்   விதிகளைக்  கொண்டு
சிலப்பதிகாரத்தையோ   பெரிய புராணத்தையோ ஆராய்வதால்
பயன் இல்லை. ஒவ்வோர்   இலக்கியமும் ஒவ்வொரு வகையாக
வளர்ச்சி பெற்றிருத்தலால்,  அந்தந்த  நூலைக் கற்று உணர்ந்து,
அதனதன் சிறப்பியல்புகளைத்   தனித்தனியே  கண்டு விளக்கம்
தருதல் வேண்டும். இவ்வகையான கண்டுணர்  முறை (inductive
criticism) முன்னமே வகுத்த  விதிகளைக்   கொண்டு ஆய்வது
அன்று; ஒரு நூலைக்   கற்கும் போது அதிலிருந்தே விதிகளைக்
கண்டு உணர்ந்து ஆய்வது ஆகும்.