| அமைப்பும் உணர்வும் கற்பனையும்உடைய நூல்தான்" என்று கூறும் திறனை இழந்து விடுவோம். அல்லாமலும்,நம் உள்ளம்தானாக ஆய்ந்தறியும் முயற்சியை மேற்கொள்ளாமல், பலர் கூடிப் போற்றிப் புகழ்ந்த நூலைக் கண்மூடிப்புகழ்தலும், பலர் கூடித்தூற்றி இகழ்ந்த நூலை கண்மூடி இகழ்தலும் நேரலாம். அந்நிலையில், அப் போற்றலையும் தூற்றலையும் நம் போற்றல் தூற்றலாக வெளியிடுவோம். உண்மையாக நோக்கின், அது நம் திறனாய்வு அன்று என்பதும், முயற்சியைக் குறைத்துப் பிறருடைய கருத்தை நாம் அவ்வாறே நம்பி வெளியிடுதலே என்பதும் விளங்கும். "எனக்கு இது பற்றிக் கருத்து ஒன்றும் இல்லை; கருத்துக் கூறுமளவுக்கு இன்னும் ஆயவில்லை. பிறர் போற்றக் கேட்டிருக்கிறேன்; அல்லது தூற்றக் கேட்டிருக்கிறேன்" என்று கூறலாம். அந்த அளவிற்கு அஞ்சாமையோ உண்மையோ இல்லை என்பதே அவ்வாறு கூறாமைக்குக் காரணம் ஆகும்.
கலைஞரின்ஆய்வு ஆயின், முழுவதும் பற்றற்ற நடுநிலையான ஆராய்ச்சி கலைஞனுக்குத் தேவை இல்லை.ஒவ்வொரு மனிதனுக்கும் புதியன படைக்கும் திறனும் உண்டு; ஆராயும் திறனும் உண்டு. சிலர் ஒரு துறையில் பயின்று விளங்கமற்றும் சிலர் மற்றத் துறையில் பயிற்சி பெற்றுச் சிறக்கின்றனர். படைக்கும் திறனே முந்தி அமைவது; ஆராய்ச்சி காலப்போக்கில் வளர்ந்து அமைவது. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொன்று சிறந்து நிற்பது உண்டு. படைக்கும் திறன் சிலர்க்கு இயல்பாகவே மிக்கு விளங்குகிறது. அவர்கள் தக்க வாய்ப்புக் கிடைத்ததும் அத்திறனைப்புலப்படுத்திக் கலைஞராக புலப்படுத்தி வளர்கின்ற அத்தகைய கலைஞரிடம் ஆராய்ச்சித் திறனை எதிர்பார்த்தல் கூடாது. ஆராய்ச்சித் திறனுக்குப் பரந்த அறிவும் விருப்பு வெறுப்பற்ற நோக்கும் வேண்டும். படைக்கும் திறனுக்குப் பரந்த அறிவு தேவை இல்லை; ஆழ்ந்த அனுபவமே தேவை. நடு நிலைமை தேவை இல்லை;ஆற்றல் மிக்க விருப்பும் வெறுப்புமே தேவை. ஆதலின், படைக்கும் திறன் உடையவரிடத்தில் ஆயும் திறனையும் எதிர்பார்த்தல் கூடாது.
|