குறிக்கும்போது சொற்களால் ஆகிய பாட்டுக் கலவாத தனியிசையையே கொள்ளல் வேண்டும். அத்தகைய இசையில் அறிவான கருத்துக்கு இடம் இல்லை. இசை நீங்கலான மற்றக் கலைகளில் கருத்துக்கள் இருந்தபோதிலும் அவற்றிற்குச் சிறப்பான இடம் இல்லை. நாடகத்திலும் இலக்கியத்திலும் கருத்துக்கள் பல இடம் பெறுகின்றன எனினும், உணர்ச்சியின் சிறப்புப் பற்றியே அவை கலைகளாகப் போற்றப்படுகின்றன. கீட்ஸ் என்ற ஆங்கிலக்கவிஞர், அழகு அழகு என்று பன்முறை கூறி அழகைப் போற்றியதில்லை; அறிவின் விருந்தாகப் போற்றியதில்லை; கண்டு கேட்டு உற்று உணரும் அழகாக - உணர்ச்சிவாயிலாக உணரும் அழகாகவே போற்றினார். கருத்துக்கள் மலிந்த வாழ்வு வேண்டா, உணர்ச்சி மல்கிய வாழ்வே வேண்டும் என்று விழைந்தார்* இதுவே பொதுவாக எல்லாக் கலைஞர்களும் கலையைப் போற்றும் நெறியாகும்.
இலக்கியக்கலை இந்தக் கலைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்ட போதிலும், ஓவியம் சிற்பம் இசை நாட்டியம் ஆகிய கலைகளைப் பொதுவாக எல்லா நாட்டாரும் நுகர முடியும்; நாடகக் கலையை ஒரு பாதியே நுகர முடியும்; மொழி அறிந்தவரே முழுதும் நுகர முடியும். இலக்கியம் முழுதும் சொற்களாலேயே ஆகிய கலை. ஆகையால் அந்த மொழி பயின்றவர் மட்டுமே நுகர முடியும். ஆகவே மற்றக் கலைகளைவிட இலக்கியக் கலை இடத்தால் வரையறுக்கப்படும் கலையாகின்றது.# * He (Keats) worshipped Beauty,not Liberty; and the beauty he worshipped was not 'intellectual', but visible, audibie, tangible 'O for a life of sensations', he cried, 'rather than of thoughts'. - A.C. Breadley, Oxford Lectures on poetry, p.226. # Poetry is an art singulary privileged. It penetrates deeper, and mixes more intimately into our lives, than any other art, because the vehicle of its power is language; and language is the very faculty of spiritual existence in this world, as well as the means whereby human ability transacts its affairs. But poetry has to pay for its privilege... - L.Abercrombi, The idea of Great Poetry, p.29. |