பக்கம் எண் :

28இலக்கியத் திறன்

Untitled Document

     மற்றொரு  வகையில்  பார்த்தால், இசை நாட்டியம் நாடகம்
ஆகிய   கலைகள்   அவ்வப்போது   தோன்றிப் பயன் அளித்து
மறையக் காண்கிறோம். ஆகவே அவை நெடுங்காலம்  வாழ்பவை.
வெயிலாலும் மழையாலும் பிறவற்றாலும்   அவை அழியக்கூடியன.
ஆயினும் மற்றவற்றைவிட நெடிது வாழ்பவை  ஆகும். இலக்கியக்
கலையோ,   ஏடுகளைவிட   நெடுங்காலம்   வாழ   வல்லதாகும்.
அதனால்தான், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  ஓவியங்களும்
சிற்பங்களும்   மறைந்த  நிலையிலும், அக்காலத்து இலக்கியங்கள்
மட்டும் இன்றும் போற்றப்பட்டு வருகின்றன.

      இவ்வாறு     வேறுபட்ட    போதிலும்     இக்கலைகள்
ஒன்றோடொன்று   தொடர்பு  உடையவை;  இயல்பினால் உறவும்
ஒற்றுமையும்   உடையவை,  அதனால்தான்   இலக்கியத்தில் சில
பகுதிகளைச் சொல்லோவியம் என்று குறித்தலும்,சில  பாட்டுகளை
நாடக   அமைப்பு   உடையவை என்று குறித்தலும் காண்கிறோம்.
ஓவியத்தைப் பேசாப் பாட்டு (dump poetry) என்றும்,  பாட்டைப்
பேசும்   ஓவியம்   (Speaking Painting)    என்றும்   அறிஞர்
குறிப்பிடுதலும் காணலாம்.

கண்ணும்செவியும்

     மனம்   புலன்களால்   வளர்ந்தது.   புலன்களில் கண்ணும்
செவியும் சிறந்தவை. கண் எத்தனையோ காட்சிகளைக் காண்கிறது.
செவி   எத்தனையோ   ஒலிகளைக்   கேட்கிறது.  ஆனால் கண்
பொருள்களின்   அழகை   நன்கு  கண்டு போற்றக் கற்கவில்லை.
செவி   ஒலிகளின்   இனிய   நயத்தை   நன்கு  கேட்டு மகிழக்
கற்கவில்லை.  கண்ணும் செவியும் அழகையும்  நயத்தையும் நன்கு
உணரும்   வகையில்   கலை   தக்க   பயிற்சி தருகிறது. இந்தப்
பயிற்சியின் பயனாக, கண்ணுக்கு   ஆழ்ந்து நோக்கும் பார்வையும்
செவிக்கு ஆழ்ந்து உணரும்    உணர்வும்வாய்க்கின்றன. அதனால்
மனம்   நுனிப்புல்   மேய்ந்து  அலையாமல், ஆழ்ந்து பண்பட்டு
இன்புறுகின்றது.

சுவை எட்டு

     புலன்களுக்கும் புலன்களின் வாயிலாக மனத்திற்கும் இன்பம்
தருவதைக் குறிக்க முன்னோர் ஒரு சொல்லைத் தேடினர். அதைத்
தமிழில் சுவை என்றனர்;  வடமொழியில் ரசம் என்றனர்; அதுவே
கலை   தரும்   இன்பம்     எனலாம்,  வாழ்க்கையில்   உள்ள