பக்கம் எண் :

ஆராய்ச்சி 273

Untitled Document

சிறப்புடையதாகப்    போற்றப்  படவில்லை.  இன்று  ஒரு புதிய
இலக்கிய வகையைத்   தொடங்கிவைத்த முதல் நூல் என்று அது
அனைவராலும்   போற்றப்படுகிறது. பாரதியார் வாழ்ந்த காலத்தில்
அவருடைய   பாட்டுகளைப்   புலவர்களும்   இதழாசிரியர்களும்
பாராட்டவில்லை. அவர் மறைந்த  பின்னரும்,  பல  ஆண்டுகள்
வரையில் அவர்  பாடிய  தேசீயப் பாடல்களை மட்டுமே பலரும்
போற்றினர்.  நாட்டுரிமைப் போர் முடிவுற்ற பிறகு இன்று அந்தத்
தேசீயப் பாடல்களைப்படிப்பவர்   ஒரு சிலரே. கண்ணன் பாட்டு,
குயில்பாட்டு  முதலியவற்றையே பாரதியார்   அளித்த இலக்கியச்
செல்வமாக இன்று   பலரும்   போற்றி   வருகின்றனர். ஆகவே
புறக்காரணத்தால்  ஒரு     நூலுக்கு   ஏற்பட்ட   செல்வாக்கும்
பெருமையும்,அந்த  காரணம் மாறியவுடனே மறைந்து விடுகின்றன.
உண்மையான இலக்கியப் பெற்றிகளாகிய விழுமியஉணர்ச்சி, சீரிய
கற்பனை, அழகிய   வடிவம்  ஆகியவற்றால் அமையும் சிறப்பே
என்றும் நிலைத்து நிற்க வல்லதாக உள்ளது.

      அதனால் நம் காலத்து நூல் ஒன்றை ஆயும் போது, நம்
மனத்தில் புறக் காரணம்   பற்றிய  கவர்ச்சி இடம்பெற்றுள்ளதா
என்பதைக்கண்டு  நீக்கும்  திறம் பெறுதல் வேண்டும். இத்திறம்
இல்லாத காரணத்தால் ஒரு   நுலைப்   பற்றி   அக்காலத்தவர்
போற்றும் போற்றுதலும் தூற்றும்   தூற்றுதலும் நம்பத்தகாதவை
ஆகின்றன இருநூறு ஆண்டுகட்கு முற்பட்டஆசிரியர் ஒருவரின
நூல்களை நாம்   புறக்  காரணம்   கருதாமல் ஆய்வது போல்,
இந்நூற்றாண்டின் நூல்களையும் ஆயும்  திறன்  பெற்றால் அது
நன்மையாகும நாம்வாழும் காலத்தின் அண்மையாலும் இடத்தின்
அண்மையாலும் நம் மனம்  நடு நிலைமை இழக்காதவாறு காக்க
முடிந்தால் அது பெருநன்மையாகும்.

சமய இலக்கியம்

   சமயத் தொடர்பு உள்ள இலக்கியங்களில் ஆராய்ச்சி செய்தல்
எளிது அன்று. ஒருசமயத்தைச்சார்ந்த அறிஞர் அந்தச் சமயத்தின்
தொடர்பு உடைய இலக்கியத்தை நடு  நிலையாக நின்று ஆய்தல்
அரிதினும் அரிதாகும்.  தொடக்கத்தில்   சிறிது   ஆராய்ச்சியின்
துணை   கொண்டு ஒரு சமயத்தைப் பற்றி அறிவோரும், பின்னர்
நம்பிக்கையே   அடிப்படையாகக்    கொள்கின்றனர்.    சமயம்
ஆராய்ச்சிக்கும்குற்றம் குறை காண்பதற்கும் இடம் தராது முழுதும்
நம்பிப்   பின்பற்றுதலே  அத் துறையில் வேண்டுவதாக உள்ளது.