பக்கம் எண் :

ஆராய்ச்சி 277

Untitled Document

கற்பனையுலகில்   பறந்து   திரிந்து  மீண்டு வந்து, அவருடைய
கற்பனைத் திறம் இத்தகையது என  விளக்கல் வேண்டும். நாமும்
அந்த நூலாசிரியரின் உணர்ச்சியைப்   பெறக்கூடிய  வகையிலும்
அந்தக் கற்பனை வானத்தில் உயர்ந்து பறக்கக்கூடிய வகையிலும்
அவருடைய ஆராய்ச்சி உறுதுணையாக   அமைதல்  வேண்டும்.
ஆசிரியர் அந்த இலக்கியத்திற்குத்   தந்த   கலை  வடிவத்தின்
அழகு நம்   உள்ளத்தைக்   கவரக்கூடிய   வகையில்   அதன்
சிறப்பியல்புகளைப்   புலப்படுத்தல்    வேண்டும்.   நூலின் பல
பகுதிகளையும்     தனித்தனியே   எடுத்துக்காட்டி,   அவற்றுள்
சிறந்தவை,   சிறப்பற்றவை,    நிலைபேறான   கலைப் பகுதிகள்,
காலத்தின்   போக்காக    உள்ள   இயல்புகள்,  நூலாசிரியரின்
நோக்கம்,   உள்ளம் பெறத்தக்க பயன் முதலானவற்றை விளக்கி,
முடிவில் நூலின்   பல   பகுதிகளுக்கு   இடையே   விளங்கும்
தொடர்பையும் நூலின்  ஒருமைப்பட்ட  அமைப்பையும் எடுத்துக்
காட்டல் வேண்டும்.

     அவ்வாறு     அன்றி,    இலக்கிய     ஆராய்ச்சியாளர்,
சொற்பொழிவாளர் பால், உடனே விளையும் பயனையோ பெறும்
மதிப்பையோ   நாடலாகாது.   மக்கள்   உடனே   உணர்ச்சி
வயப்பட்டுப் புலப்படுத்தும்   போற்றுதலையோ தூற்றுதலையோ
நாடாமல், காலம் கடந்து விளங்க  வல்ல உண்மையை மட்டுமே
நாடல் வேண்டும். இல்லை எனின், ஓர் இலக்கியத்திறனைப் பிறர்
புகழ்கின்றனர் என்ற   காரணத்திற்காகவே  அதனைப் பழித்து,
அவர்களல்லாத மற்றவர்களின்   மதிப்பைப்  பெற மனம் நாடும்.
சிலர் குறை கூறும்   நூலை,   அவர்கள்  இகழ்கின்றனர் என்ற
காரணம் பற்றியே மிகப் புகழ்ந்து   மற்றவர்களிடம் செல்வாக்குப்
பெற மனம் தூண்டும்.   ஆகவே,  உடனடியாகப் பிறர் மதிக்கும்
மதிப்பை நாடாமல்,   பிறர்   பழிக்கும்  பழிப்புக்கும் அஞ்சாமல்,
நூலின்   உண்மைப்   பெற்றியை   உள்ளவாறு ஆய்ந்து கூறல்
வேண்டும்.

     ஒரு   நூலைப்   போற்றத் தொடங்கினால் சிறு குறையும்
காணாமல் முழுதும்   போற்றுதலும்,   ஒருகால் ஏதேனும் குறை
புலப்படினும் அதனைக்  குறை என்று சுட்டாமல் இன்ன  இன்ன
காரணம் பற்றி   நூலாசிரியர்   அவ்வாறு  ஓதினமையால் அது
குற்றமன்று என்று நிறுவுதலும்  பழங்கால அறிஞரின் இயல்புகள்.
அல்லது, ஒரு நூலில் குற்றம்  காணப் புகின், அந்நூலில் உள்ள
குணங்களுள்  ஒன்றனையும்   எடுத்துக்   காட்டாமல், முழுதும்
குற்றமாவே காட்டுதலும் ஒரு சிலரிடத்துக் காணலாம். 'இலக்கண