பண்பு எனக் கூற வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். பொருள்களில் அழகு இல்லை என்பதும், புலன்களின் வாயிலாக மனமே அவற்றில் அழகை அமைத்துக்கொள்கிறது என்பதும் அவர்களின் கொள்கைகள் இத்தாலி நாட்டில் நெடுங்காலம் வரையில் மலைக்காட்சி அழகுடையதாகப் போற்றப்படவில்லை. அக்காலத்தினர் மலையை வெறுத்தனர். போக்குவரத்துக்கு இடையூறானது என்றும், ஆபத்தும் களைப்பும் விளைப்பது என்றும் அதை ஒதுக்கி வந்தனர். கலை மறுமலர்ச்சி ஏற்பட்ட பிறகே அந்நாட்டினர் மலைக்காட்சியை அழகுள்ளதாகப் போற்றிப் பாராட்டக் கற்றனர் என்பர். ஆகவே,கலைப் பயிற்சியால் அழகுணர்ச்சி வளர்கிறது என்றும், மனம் பொருள்களிடத்தில் அழகைப் படைத்து மகிழ்கிறது என்றும், மனத்தின் அனுபவத்தை விட்டுப் பொருள்களிடத்தில் தனியே அழகு இல்லை என்றும் கொள்ளலாம் . நாவால் உணரும் சுவையை எடுத்துக்காட்டாகக் கொண்டு இதனை ஆராய்வோம்.சுவை எங்கு உள்ளது ? உணவில் இடும் உப்பில் உள்ளதா? நாவில் உள்ளதா? உப்பில் உள்ளது எனின் உப்பு இட்டு உண்ணக் கற்றதற்கு முன், நா உணவில் சுவை காணவில்லையா ?சிலர் சிறிது உப்புச் சேர்த்து மகிழவும் வேறு சிலர் சிறிது கூடுதலாகச் சேர்த்து மகிழவும் காரணம் என்ன ? சுவையின்பம் உப்பில் இருப்பதாயின்,இவ்வேறுபாட்டிற்கு இடம் இல்லையே.ஆகவே,ஓர் அளவாக உப்புச் சேர்த்துப் பயின்ற நாவின் பழக்கம் சுவையின்பத்திற்குக் காரணமாக இருக்கக் காண்கிறோம். அந்த அளவாக உப்புச் சேர்த்தலை ஏன் சுவையின்பம் என்று கொள்கிறோம்?காரணம் நமக்குத்தெரியாது; நாவிற்கே தெரியும்.அவ்வாறே,ஓவியத்தைக் கண்டோ இசையைக் கேட்டோ மகிழும்போது,நம் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பது நமக்கே தெரிவதில்லை.மகிழ்கிறோம் என்பது தெரியும்; மகிழ்ச்சிக்குக் காரணம் தெரியாது.அது கலைஞர்க்கும் தெரியாது; கலைமனத்திற்குத் தெரியும் ; ஆயின் அந்த மனத்திற்கும் அதை விளக்கிக் கூறத் தெரியாது.
|