புறக்கணித்து அப்பால் செல்கின்றான். பழக்கத்தின் காரணமாக அவற்றின் அழகின்பத்தை நுகரும் மனம் அவனுக்கு இல்லையாகிவிடுகிறது. கலை, சுவை நிரம்பியதாக அமைந்து அத்தகைய மரத்துப்போன மனத்தையும் ஈர்த்து நிறுத்தி விருந்து ஊட்ட வல்லதாக இருக்கிறது; ஆதலின் தேவைப்படுகிறது. குழப்பம் தெளிதல் உலகம், வேண்டுவன வேண்டாதன பொருந்துவன பொருந்தாதன எல்லாம் கலந்து குழம்பிய நிலையில் கதம்பமாக உள்ளது எனக் கண்டோம். புலன்கள் எல்லாவற்றையும் கொள்வதில்லை; வேண்டுவன பொருந்துவன சிலவற்றை மட்டும் ்கொண்டு மற்றவற்றைத் தள்ளுகின்றன, மறக்கின்றன. இந்தக் கொள்ளலும் தள்ளலும் இல்லாவிடில், அறிவான வாழ்க்கைக்கு உரிய மூளை சுமை தாங்காமல் துன்புறும். இது எல்லோர்க்கும் அனுபவமாகும். எல்லார்க்கும் உள்ள இந்த இயல்பே, கலைஞரிடத்தில் சிறப்புற அமைந்துள்ளது. அவர்கள் அழகுணர்ச்சியுடன் வேண்டுவன பொருந்துவன தேர்ந்து கொள்கின்றனர்; மற்றவற்றை விடுகின்றனர். பெரும்பாலோர் தன்னலம் கொண்டு கண்மூடிச் செய்வதையே கலைஞர் அழகுணர்ச்சி கொண்டு தெளிவுறச் செய்கின்றனர் எனலாம். அதனால், பெரும்பாலோர் கண்டு கேட்டு உணர்ந்து கூறுவனவற்றைவிட, கலைஞர் கண்டு கேட்டு உணர்ந்து புலப்படுத்துவன கலையாக விளங்கிக் கற்பவரின் உள்ளத்தைக் கவர்கின்றன.* ஆற்றங்கரையில் சிதறுண்டும் பரந்தும் கிடக்கும் கற்களைப் போல் உள்ளன இயற்கையிலும் வாழ்விலும் காணப்படும் அழகுப்பகுதிகள். அவற்றைக் கண்டு கவலையின்றிச் செல்கின்றனர் பெரும்பாலோர். ஆயின் சிறுமியர் காணின், அழகிய கற்கள் சிலவற்றைப் பொறுக்கி, ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே அந்தக் கற்களை ஒழுங்குற அமைத்து விளையாடுவர்; சிற்றில் இழைத்துக் கண்ணுக்கும் மனத்துக்கும் இன்பம் ஊட்டுவர். * The truth seems to be that the human brain abhers the complexity-the apparently aimless complezity - of nature and real life and is for ever trying to get away from it by selecting this and ignoring that. - A Quiller-couch. Adventures Criticism. |