ஒழுங்கற்று வடிவற்றுக் கிடக்கும் பொருள்களை இவ்வாறு ஒழுங்குற அமைத்து அழகுபெறச்செய்யும் இந்த ஆர்வம் மனிதர் எல்லோருக்கும் பொதுவாக உள்ளது.* குழந்தைப் பருவத்தில் இது தெளிவாக விளங்குகிறது; வளர்ந்த பின் செயற்கையான வாழ்க்கைக் கவலைகள் இந்த ஆர்வத்தை மழுங்கச் செய்கின்றன. கலைஞர் மட்டும் இந்த ஆர்வம் மழுங்காமல் காத்துக் கொள்கின்றனர். நில்லாத அழகு நிலைபெறல் நிலையில்லாமல் மாறும் அழகின்பத்தை நிலைபெறச் செய்து வேண்டும்போது கிடைக்குமாறு செய்வதால் கலை தேவைப் படுகிறது என்பதை மேலே கண்டோம். நிலையாமையே உலகத்தின் இயற்கை என்பர் சான்றோர். யாக்கை, இளமை, செல்வம் முதலிய வற்றில் நிலையாமையைப் புலவர் சிலர் உணர்ந்து உணர்ந்து பாடியிருக்கின்றனர். அவை மட்டும் அல்லாமல் அழகு உணர்ச்சி என்பனவும்-நிலையில்லாதவைகளே. மேற்கு வானத்தில் மாலையில் காணப்படும் அந்தி அழகு நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்கிறது. உள்ளம் வியந்து போற்றும் அழகுமிக்க சிறந்த காட்சியை வானத்தில் கண்டு மகிழ்கிறோம். சிறிது நேரம் கழிந்த பிறகு மீண்டும் அதைக் கண்டு மகிழ விரும்பினால், அந்த அழகு புலன்களுக்கு எட்டாத ஒன்றாக ஆகிவிடுகிறது. ஒருநாள் ஒருவேளை உள்ளத்தில் தோன்றிய புதிய உணர்ச்சி மற்றொரு வேளையில் தோன்றுதல் அரிதாகிறது. இவ்வாறு மறைந்து மாறிப்போகும் அழகையும் உணர்ச்சியையும் வேண்டும்போது பெற முடியாமல் மனம் ஏங்குகின்றது. இயற்கையோ உலகமோ அந்த ஏக்கத்தைத் தீர்க்க முடிவதில்லை. நிலையில்லாமல் மாறிப்போகும் அந்த அழகையும் உணர்ச்சியையும் மீண்டும் பெற்று மகிழ விரும்பினால், அதற்காகக் கலையின் உதவியை நாட வேண்டியிருக்கிறது. அதற்கு உற்ற கருவியாய் இருந்து உதவுவது கற்பனையே ஆகும். ஓரிடத்தில் கண்ட அழகையும் பெற்ற உணர்ச்சியையும் மற்றோரிடத்தில் பெற விரும்பினால் அந்த அழகையும் உணர்ச்சியையும் கற்பனை வடிவத்தில் படைத்துக் காக்க வேண்டும். மறைந்து போகும் மாலைக் கதிரவனின் அழகை ஓவியம் மறையாமல் காத்துத் தருகின்றது வளர்ந்து மாறும் * To bring order out of chaos, from out of shapelessness is perhaps the most fundamental of, human desires. -E.G. Moll, The appreciation of Poetry, p.101 |