இழந்துவிடும். சிறு போராட்டமும் சிறு சிக்கலும் அவர்க்கு மிகமிகப்பெரியவையாய்த்தோன்றும். இந்நிலையில் அவருடைய உணர்ச்சிகள் மிக்க வேகம் பெறும் இத்தகைய வேகமான இயக்கத்திற்குப்பின்-சூறாவளிக்குப்பின் - எவ்வாறோ அமைதி நேர்ந்தால் அந்த அமைதியில் கலை உருக்கொள்ளும். வேகமான உணர்ச்சி எல்லாம் அப்போது கலையாக வடித்தல் எளிதாகும். அந்த அமைதி வாய்ப்பதற்கு முன்னே அவருடைய மனம் போராட்டத்திலும் சிக்கலிலும் நெருக்குண்டு வருந்துதல் உண்டு. அந்நிலை நீடிக்குமானால், கலைஞர் வாழ்க்கை அவற்றிற்கு இரையாகிப் பாழ்படுதலும் உண்டு. கலைஞர் பலருடைய வாழ்க்கை அவ்வாறு வீணில் அழிந்தது உண்டு. அவ்வாறு அழியாமல் பொறுமையுடன் தம் மனத்தைக் காக்கவல்ல கலைஞர் ஒரு சிலரே. அவர்கள் உயர்ந்த சான்றோரை நம்பியோ, அல்லது, அறநெறியில் உறுதியான பற்றுக் கொண்டோ, அல்லது மெய்யுணர்வால் (Philosophy) தெளிவு பெற்றோ, தம் வாழ்வை வீணில் அழியாதவாறு காத்துக்கொள்வர்; அத்தகைய கலைஞர்களே அழியாத கலைச் செல்வங்களை உலகத்திற்குப் படைத்துத் தந்து நிலையான புகழ் பெற்றுள்ளனர். உணர்ச்சி மிகுதி கலையுணர்ச்சி மிக்க கலைஞர்கள், அறிவின் வாயிலாக உலகத்தை அறிவதைவிட, புலன்களின் வாயிலாக உலகத்தைக ்கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று உணர்வதே மிகுதியாகும். கண்ணால் கண்ட பொருள்களின் அழகைப் பிறரும் காணுமாறு கற்பனையில் படைத்துக் காட்டல், செவியால் கேட்டுப் பெற்ற ஒலியின்பத்தைப் பிறரும் கேட்டு மகிழுமாறு கற்பனையில் படைத்து அளித்தல் முதலியவைகளே கலைஞர் தொழில். கீட்ஸ் முதலான கவிஞர் சிலர் உலகத்தாரின் நீதி அறம் தத்துவ ஆராய்ச்சிகள் முதலியவைகளைப் பற்றியும் கவலைப் படவில்லை.*தம் கண்ணுக்கும் செவிக்கும் மற்றப் புலன்களுக்கும் எட்டிய இன்பங்களே அவர்களுக்கு வேண்டியவை. "எண்ணங் களால் வாழ்தலைவிட, புலன் உணர்வுகளால் வாழ்தல் எவ்வளவு உயர்ந்தது!" என்று கவிஞர் கீட்ஸ் ஏங்கினார். *A.C. Bradley, Oxford Lectures on Poetry,p.226 |