பக்கம் எண் :

44இலக்கியத் திறன்

Untitled Document

                   4. இலக்கியம்

கலைகளில் சிறந்தது

       கலைகளுள் இசை மிகச் சிறந்தது என்பர் சிலர்; இலக்கியமே
மிகச் சிறந்தது என்பர் சிலர்.

      அறிவின்.   கலப்பு இல்லாத     காரணத்தாலும், கேட்டோர்
யாவரையும்     பிணிக்கும் தன்மையாலும் இசையே சிறந்தது என்பர்.
மனித     வாழ்வின்   சிறப்பியல்பாக உள்ள மொழியால் அமையும்
காரணத்தாலும்,    வழிவழியாக     விளங்கி    நிலைத்த    பயன்
அளித்தலாலும் இலக்கியமே சிறந்தது என்பர்*.

      மனிதன்   படைத்துக்கொண்ட   நாகரிகக் கருவிகளுள் மிகச்
சிறந்தது    மொழி என்பது. பேசுவதற்கும் எழுதுவதற்கும் உரியதாக
மனிதன்    படைத்துக்கொண்ட   மொழி இல்லையாயின், இன்றைய
நாகரிக வளர்ச்சியே இல்லை எனலாம்; மக்கள் சேர்ந்து பழக வாயில்
இல்லை, அமைப்புகள்   இல்லை,    மன்றங்கள்   இல்லை, நீதிகள்
இல்லை, சமயங்கள் இல்லை,   சட்டங்கள்   இல்லை, அரசு இல்லை,
நாடுகள் இல்லை,  உலக உறவு இல்லை. வாணிகம் இல்லை, நூல்கள்
இல்லை,   அறிவியல்    இல்லை  என்ற நிலையே ஏற்பட்டிருக்கும்.
ஆகவே,      மன்பதையின்       வளர்ச்சிக்கும்     வாழ்வுக்கும்
அடிப்படையான   மொழி மிகமிகச் சிறந்த நாகரிகக் கருவி எனலாம்
அத்தகைய    மொழியை -    மொழியின்   சொற்களையே  ஊடு
பொருளாகக்    கொண்டு  அமைவது இலக்கியம். ஆகையால் அது
கலைகளில் சிறந்தது என்பது பொருந்தும்.


        

        *Poetry is an art singularly privileged. It penetrates deeper,and   mixes more intimately into out lives, than any
other   art,   because the vehicle of its power is language;
and    language is the very faculty of spiritual existence in
this   world as the means whereby human ability transacts
its affairs.

      - L.Abercrombie, the idea of Great Poetry p.25.