உலக வரலாற்றை மாற்றியமைப்பதில் மற்ற எல்லாவற்றையும் விட இலக்கியம் ஆற்றல் மிக்கது என்பர். ஏன் எனில், அறிவுத் துறைகள் மனிதரின் மூளைக்கு மட்டும் எட்டி இயங்குவன. ஆனால் உணர்ச்சிக்கு வடிவங்களான இலக்கியத் துறைகள், மூளையை மட்டும் அல்லாமல் மனத்தால் வாழும் வாழ்வு முழுவதையுமே இயக்குவன. மனிதன் அறிவால் அறிந்து வாழும் பகுதியைவிட, விரும்பியும் வெறுத்தும் நம்பியும் சோர்ந்தும் போற்றியும் தூற்றியும் வாழும் பகுதியே மிகுதியாகும். ஒரு சமுதாயத்தின் விருப்பு வெறுப்பு நம்பிக்கை முதலியவற்றை வளர்த்துப் பண்படுத்துவது அந்தச் சமுதாயத்தின் இலக்கியமே ஆகையால் அதுவே மனித வாழ்வைப் பெரிதும் மாற்றியமைப்பது என்பர்.*ஆகவே சட்டம் அறிவியல் முதலிய எவற்றையும் விடப் பெரிய கருவியாய்ச் சமுதாயத்தை உருவாக்குவது இலக்கியம் எனலாம் அதனால் பாட்டு காவியம் நாடகம் கதை முதலியன இயற்றித்தரும் புலவர்கள், சட்டம் இயற்றும் ஆட்சியாளரைவிட ஆற்றல் மிக்கவர்கள்; தத்துவ ஞானிகளை விடவும் செல்வாக்கு மிக்கவர்களாய் மனிதரின் உள்ளத்தைஆள்பவர் அவர்களே என்பர்+. நிலைத்த வாழ்வு செய்தித்தாள்கள் ஒரு நாளுக்கு உரியன. மற்றொரு நாளுக்கு உதவாமல் அழிகின்றன. அது இயல்பே. நூல்களின் வாழ்வு அழிவும் நாட்கணக்கின அல்ல; ஆண்டுக் கணக்கின. எல்லா நூல்களும் அழிவன அல்ல. அவற்றுள் அழியாதன சில உள. அந்தச் சிலவே கலையுலகில் இலக்கியங்களாகப் போற்றத்தக்கன. _____________________________________________________________________________
* Poets are the rulers of men's spirits more than the Philosophers, Whether mental or Physical J.G. Sharip Aspects of Poetry, P.105. + Poets measure the circumference and sound the depths of human nature with a comprehensive and all pervading spirit... Poets are the unacknowledged legislators of the world. - P.B. Shelley, A Defence of Poetry. |