பக்கம் எண் :

இலக்கியம் 47

Untitled Document

என்னும்   உண்மை  எவர்   கூறினாலும்  அத்தகைய உண்மையாகவே
நிற்கும்.  ஆனால்   கற்பின்   பெருமையைக்   கபிலர் கூறியது போல்
இன்னொருவர்     கூற   முடியாது.   ஆகவே   உண்மை    மட்டும்
அல்லாமல்,   உண்மையை   உணர்ந்தவரின்  அனுபவங்களும் நமக்குக்
கிடைக்கின்றன.   அந்த   அனுபவங்களை   உணரும் வேட்கை நமக்கு
என்றும்   உள்ளது.   ஆனால்     ஒரு    முறை   ஓர் உண்மையை
உணர்ந்தவுடன்,    அது நம்    அறிவுக்கு   எட்டியதாக,   பழகியதாக
ஆகிவிடுகிறது.    ஆகவே  இரண்டாம் முறை அதை அறிய வேண்டும்
என்ற     வேட்கை    இல்லாமற்   போகிறது. மூளை, அறியாதவற்றை
மட்டும்   அறிய     விழைகிறது;    புதிய  அறிவை மட்டும் நாடுதலே
அறிவுப் பசியாக உள்ளது.    மனம், பழைய அனுபவத்தையும் திரும்பத் 
திரும்பப்   பெற    விழைகிறது;   உணர்ச்சிகளோடு   கூடிய எதையும்
உணர்தல்   மனத்தின்    பசியாக    உள்ளது. ஆகவே, உண்மைகளை
மட்டும்      உணர்த்தும்    நூல்கள்     விரைவில்     மாறிப்போக,
உண்மைகளோடு      உணர்ச்சி    மிக்க   அனுபவங்களும் அமைந்த
இலக்கியங்கள் என்றும் போற்றப்பட்டு வருகின்றன. 

     வின்செஸ்டர்     என்னும்    அறிஞர் இதையே வேறு வகையாக
விளக்குகிறார்.*கணக்கு     நூல்கள்    முதலியன    உணர்த்தும்
உண்மைகள்    நிலையான ஆர்வத்திற்கு உரியவை; ஆனால், இலக்கிய
நூல்களின்   பொருள்கள்   மட்டும் அல்ல,  அந்நூல்களும் நிலையான
ஆர்வத்திற்கு    உரியவை;    ஆகையால்தான்    கணக்கு   நூல்கள்
முதலியன   மாறிப் போக,    இலக்கிய நூல்கள் நிலைத்து வாழ்கின்றன
என்கிறார்.

     ஓர் இலக்கிய   நூல்   வெவ்வேறு   மன  நிலைக்கு வெவ்வேறு
உணர்ச்சிகளை      எழுப்ப   வல்லது.   ஒருவர்க்கே    இளமையில்
ஒருவகை உணர்ச்சியும்     வளர்ந்த பின் மற்றொரு வகை உணர்ச்சியும்
முதுமையில்     வேறொரு    வகை    உணர்ச்சியும் அளிக்க வல்லது.
உணர்ச்சி    வடிவமான      மனம்,    என்றும்    ஒரே   நிலையில்
    



       * Literature might be said to consist not of those books
that contain   truths of  permanent interest, but of books that
are themselves of permanent interest.
  - C.T. Winchester, Some Principles of Literary Criticism, p.39