பக்கம் எண் :

48இலக்கியத் திறன்

Untitled Document

இருப்பதில்லை      ஆகவே     இலக்கிய    அனுபவம்   பலர்க்குப்
பலவகையாகவும்      ஒருவர்க்கே  காலத்திற்கேற்பச் சில வகையாகவும்
வேறுபடுகிறது.    இவ் வேறுபாடும்     இலக்கியத்தின்    நெடுங்காலக்
கவர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைகிறது எனலாம்.

தோன்றும் காரணம் 

           கலை தோன்றுவதற்குக் காரணமாக உள்ளவைகள் நான்கு
என்பர். அவை:-
            1. தன்னுணர்ச்சியை வெளியிடும் விருப்பம்.
            2. பிறருடைய வாழ்விலும் செயலிலும் நமக்கு உள்ள
              அக்கறை.
            3. உண்மையுலகில் உள்ள ஆர்வமும் அதை ஒட்டிக்
              கற்பனை யுலகினைப் படைப்பதில் உள்ள ஆர்வமும்.
            4. ஒலி, கோடு, வண்ணம், சொல் முதலியவற்றிற்கு
              அழகிய வடிவம் தந்து அமைப்பதில் உள்ள ஆசை.

              இவற்றுள் முதலிரண்டுமே உணர்ச்சி, கருத்து என்னும்
உறுப்புகளாக      இலக்கத்தில்     அமைவன, மூன்றாவது, கற்பனை
என்னும்   உறுப்பாக அமைவது. நான்காவது,  இலக்கியத்திற்கு வடிவம் 
என்னும் உறுப்பாக அமைவது.

செய்யுள் உரைநடை 

                 இலக்கியம் செய்யுள் வடிவாகவும் அமையும்; உரை
நடையாகவும்     அமையும். அகப்பாட்டு,   புறப்பாட்டு, பக்திப்பாட்டு,
காவியம்    முதலியன, செய்யுள் வடிவில் அமைந்தவை. தொடர் கதை
சிறுகதை,      கட்டுரை முதலியன உரைநடையால் அமைவன. நாடகம் 
செய்யுளாகவும் அமையும்; உரை நடையாகவும் அமையும்.

              செய்யுள், சீரும் தளையும் அடியும் உடையது; ஒலிநயம்
உடையது.      உரைநடை,      மக்கள்   பேசும் முறையில் சொற்கள்
அமைய வாக்கியங்களாக எழுதப்படுவது.

செய்யுளாக     எழுதப்படும்    இலக்கியத்தில்    விழுமிய  உணர்ச்சி
மிக்கு      விளங்குமாயின்     அதுவே     பாட்டு எனக் கூறப்படும்.