பக்கம் எண் :

இலக்கியம் 51

Untitled Document

எழுதப்படும்  நிலை   பழங்காலத்தில்  இருந்தது, அந்நிலையில்
இலக்கியம்     மட்டும்   அல்லாமல், மருத்துவம்,   சோதிடம்
முதலியனவும் செய்யுளிலேயே எழுதப்பட்டன.

     உரைநடை என்ற ஒன்று  வளர்ச்சி  பெற்றபின், மருத்துவம்,
சோதிடம்  முதலிய  நூல்கள் உரைநடையில் எழுதப்பட, காவியம்
நாடகம் தனியுணர்ச்சி  முதலியசெய்யுளில் எழுதப்படுவன ஆயின.
அவை பாட்டுக் கலையாய்ச் சிறப்புற்று விளங்கின.

    மூன்றாம்   நிலையில்,      உரைநடைக்கும்     பாட்டுக்கும்
போட்டியான   வளர்ச்சி ஏற்பட்டு,  பல  துறைகளை   உரைநடை
கைப்பற்றிக் கொள்ள,  பாட்டு  அவற்றை இழந்து ஓரிரு துறைகளை
மட்டும்  உடையதாய் நின்றது  எனலாம்; அதுவே இன்றைய நிலை.
பாட்டுக்கு   உரிய  காவியம்  இன்று தொடர் கதையாய் உரைநடை
வடிவில்   வளர்கிறது,   பாட்டுக்கு   உரிய   நாடகங்கள்,  இன்று
உரைநடையில்    எழுதப்படுகின்றன.   பாட்டில்    அமைந்திருந்த
நீண்ட    வருணனைகள்  இன்று கட்டுரைகளாக உரைநடை வடிவம்
பெறுகின்றன.    பாட்டாக   விளங்கிய அகப்பொருள் புறப்பொருள்
பற்றிய   சொல்லோவியங்கள்  இன்று சிறுகதைகளாக உரைநடையில்
வாழ்கின்றன.  எஞ்சி   நின்ற தன்னுணர்ச்சிப் பாட்டுக்களும் சமுதாய
உணர்ச்சிப்    பாட்டுக்களுமே   இன்று  பாட்டுக் கலையை விட்டுப்
பிரியாமல்    வாழ்கின்றன. இலக்கியம் என்னும் கலைக் குடும்பத்தில்
மூத்த மகளாய்ப்   பிறந்து   விளங்கிய     பாட்டு என்னும் செல்வி,
தொடக்கத்தில்   ஒரே செல்வ மகளாக விளங்கிய காலம் பழங்காலம்.  
காவியம்   நாடகம்   அகம்   புறம்   முதலாய   எல்லாக் குடும்பப்
பொறுப்புகளையும்     அந்த    மூத்த   மகளே     மேற்கொண்டு
செம்மையாக    நடத்தி   வந்தாள்.   அவளை அடுத்துத் தங்கையர்
பிறந்து   வளர   வளர,   அப் பொறுப்புகள் ஒவ்வொன்றாய் அவள்
கையை   விட்டு    நழுவலாயின.    இன்று அவளுடைய தங்கையர்
தொடர்கதை,     சிறுகதை,      நாடகம்,     கட்டுரை  முதலியன
மேற்கொண்டு   தமக்கையை   விட்டுப்    பிரிந்து   செல்வாக்குடன்
வாழ்கின்றனர்.   மூத்த   மகளாகிய   பாட்டு,   பிறந்த வீட்டிலேயே
நின்று, பழைய   செல்வங்களைத்  தங்கையர்க்கு வாரி வழங்கிய பின்,
தன்னுணர்ச்சி, சமுதாய    உணர்ச்சி ஆகிய இருவகைப் பொறுப்புகள்
மட்டும்   உடையவளாய்     வாழ்கின்றாள்; தன்   முன்னைய சீரும்
சிறப்புமான   பெருவாழ்வை    நினைந்து இன்புறும் பேறு அவளுக்கு
இன்று உள்ளது.