பக்கம் எண் :

52இலக்கியத் திறன்

Untitled Document

பாட்டின் உயர்வு

     இலக்கிய      வகைகளுள்  பாட்டுக்குக் மற்ற வகைகளுக்கும் 
ஒரு     நுட்பமான      வேறுபாடு   உண்டு.   இலக்கியவகைகள்
எல்லாவற்றிற்கும்           உணர்ச்சியும்    அழகிய    வடிவமும்
இன்றியமையாதவை;    ஆயினும் பாட்டே உணர்ச்சி மிக்கது; வடிவ
அமைப்பிலும்   சிறந்தது.   உணர்ச்சி    குறைந்த     விளக்கமோ
வருணனையோ,   நிகழ்ச்சியோ   எதுவும்   பாட்டில்   இடம் பெற
முடியாது;   கதை   முதலியவற்றில்  இடம் பெற முடியும். ஒலி நயம்
இல்லாமலும்   மற்ற  இலக்கிய வகைகள் வடிவு பெறும்;  மிக இனிய
ஒலிநயம்   இல்லாமல்   பாட்டு  வடிவு    பெறுவதில்லை. ஆகவே
இலக்கிய வகைகளுள்   பாட்டுக்கலையே உயர்ந்தது என்றும்  தூயது
என்றும் கூறுவர்.   ஆகவே,  இலக்கியம் ஒரு மலை எனின், பாட்டு
அதன் சிகரம் எனலாம்;  இலக்கியம் ஒரு பெரிய மரம் எனின், மற்ற
வகைகள் அதன் பக்கக்கிளைகளாக விளங்க, பாட்டு அதன் உயர்ந்த
உச்சிக்கிளையாக   விளங்குவது   எனலாம்.   இத்தகைய   சிறப்பு
இருப்பதால்தான்,  மற்றஇலக்கிய  வகைகள் பல தோன்றித் தோன்றி
மறைய,  அவற்றுள்     ஒரு சில நூல்கள் சிறிது காலம் நின்று வாழ,
பாட்டு   மட்டும்   நெடுங்காலம்   அழியா   வாழ்வு  பெறுகின்றது.
நான்முகன் படைத்தன    எல்லாம்   அழிவன    என்றும், கவிஞர்
படைப்பன  மட்டும்   அழியாமல் வாழ்வன என்றும் புலவர் ஒருவர்,
தம்   தொழிலை  நினைந்து    பெருமிதம் கொள்ளும்* அளவிற்குச்
சிறப்புடையது பாட்டே ஆகும்.

     ஆகவே    இலக்கியத்தை   ஆய்வோர்,   கதை     நாடகம்
முதலியவற்றை     ஆய்வதைவிட மிகுதியாகப் பாட்டையே ஆய்ந்து
காண்பர்.    அதனால் இலக்கியத் திறனாய்வு பெரும்பாலும் பாட்டின்
திறனாய்வாகவே   முடிகிறது   என்பதை   அறிஞர்     பலருடைய
நூல்களில்   காணலாம்.   பாட்டின்    திறன் பற்றி ஆய்ந்து காணும்
உண்மைகள்,   மற்ற   இலக்கிய வகைகள் எல்லாவற்றிற்கும் போதிய
விளக்கம் தந்து    விடுகின்றன. ஆதலின், பாட்டின் திறனே சிறப்பாக
ஆயத்தக்கதாகும்.


      * கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்
        மலரவன் வண்டமிழோர்க்கு ஒவ்வான்-மலரவன செய
        வெற்றுடம்பு மாய்வன போல் மாயா புகழ்கொண்டு
        மற்றிவர் செய்யும் உடம்பு

                      -குமரகுருபரர், நீதிநெறி விளக்கம்,7.