இன்றும் அவை பாட்டுக்கும் கதைக்கும் உரிய உணர்ச்சிகளாக உள்ளன. ஆனால், ஈயாப் பற்றன் (உலோபி) ஒருவன் தன் பொருளை இழந்து வருந்தும் துன்ப உணர்ச்சியை யாரும் பாட்டாகப் பாடிவைக்கவில்லை.* அவன் வருந்துவதும் துன்ப உணர்ச்சிதான்; ஆயினும் அந்தத் துன்ப உணர்ச்சி கலைக்கு உரியதாவதில்லை. ஏன் எனில், அது கலைஞரின் உயர்ந்த உள்ளத்தைக் கவர்வதில்லை. ஆகவே, துன்ப உணர்ச்சிகளிலும் கலைஞரின் உள்ளம் ஈடுபடும் அளவுக்கு ஆற்றலும் விருப்பமும் உடைய நல்லுணர்ச்சிகளே கலைக்கு உரியனவாகின்றன என்பது தெளிவு.** உள்ளம் கவர்தல்
ஒரு பொருளைக் காணும்போது அதன் பகுதிகள் பலவற்றையும் கண் காண்கின்றது. ஆனால் உணர்ச்சி வயப்பட்ட மனம் அந்தப் பொருளின் சில பகுதிகளை மட்டுமே நன்கு பதிய வைத்துக்கொள்கிறது. ஆகையால் வேறு காலத்திலோ வேறு இடத்திலோ அந்தப் பொருளைக் கற்பனை செய்து காணும்போது அதன் சில பகுதிகள் மட்டுமே மனக்கண்ணில் நிற்கின்றன. சிறப்பு அற்ற பகுதிகள் மறைந்து போகச் சிறப்பு உள்ள சில பகுதிகள் மட்டுமே கற்பனையில் வந்து நிற்கின்றன. அதனால்தான் கண்ணால் கண்ட பொருளுக்கும் கற்பனையில் படைத்த பொருளுக்கும் வேறுபாடு இருக்கின்றது. * புலவர் எவரேனும் அவனுடைய துன்பத்தைப் பற்றிப் பாடினும், அது அவனுடைய ஈயாப் பற்றுள்ள வாழ்க்கையை எள்ளி நகையாடுவதாக அமையுமே அல்லாமல், ஆழ்ந்த துன்ப உணர்ச்சி உடையதாகாது. ** A maiden may sing of her lost love, but a miser cannot sing of his lost money.-A.H.R. Ball Ruskin as Literary Critic. P.52.! Poetry is the Spontaneous overflow of powerful -Wordsworth, Prefaces and Essays on Poetry P 25. |