பக்கம் எண் :

உணர்ச்சி 71

Untitled Document

ஊமைபோல்   இருந்த நிலையில், இலக்கியத்தைக் கற்று அதில்வரும்
கற்பனை    மாந்தரிடம் அதே உணர்ச்சி திறம்பட வெளிப்படுதலைக்
காணும்போது     மகிழ்ச்சி பிறக்கும்.   தக்க வடிவம் தந்து தம்மால்
வெளிப்படுத்த     முடியாத    உணர்ச்சியை   இலக்கியத்தில் தக்க
வடிவத்தில்    காணும்    போது,   உள்ளம் விரிவடைந்து மகிழ்தல்
இயல்பாகும்.

ஒத்துணர்வு

          வரலாறு குறிப்பிட்ட     ஓர் உண்மையைக் - குறிப்பிட்ட
ஒருவர்   அல்லது    ஒரு சாராரின் வாழ்க்கை நிகழ்ச்சியை-கூறுவது.
இலக்கியமோ,    பொதுவான உண்மையை எல்லார்க்கும் பொதுவான
வாழ்க்கையின்    இயல்புகளை   விளக்குவது. இலக்கியத்தில் ஊரும்
பெயரும்    குறித்துச்   சில மாந்தர் குறிக்கப்பட்டாலும், அவர்களின்
இன்ப   துன்பங்களும்    விருப்பு  வெறுப்புகளும் நலந் தீங்குகளும்
அனைவர்க்கும்    பொதுவானவைகளே; அனைவரும் தாம் உற்றவை
போல் உணரத் தக்கவைகளே.

          பழந்தமிழ்   இலக்கியத்தில்   புறநானூற்றுப் பாட்டுகளில் 
பாடப்படு   வோரின்   பெயரும் ஊர் முதலியனவும் குறிக்கப்படினும்,
அவை எல்லாரும்     உணரத்தக்க   பொதுவான உணர்ச்சிகளையும்
உண்மைகளையுமே     குறிக்கின்றன. அதனால்தான் அப்பாட்டுகளை
இன்று   நாமும்   படித்துப்   பயன்பெற   முடிகின்றது. அகநானூறு
முதலியவற்றில்    உள்ள    அகப்பொருட்    பாட்டுகளில்  உள்ள
காதலுணர்ச்சிகளும்    அவ்வாறே    பொதுவானவை   என்பது கூற
வேண்டா.    அவ்வாறே    பொதுவாக விளங்கல் வேண்டும் என்றே,
அகப் பாட்டுகளில்    தலைவன்    தலைவி முதலானோர் இன்னோர்
என்று பெயரும் பிறவும் குறிக்கப்படாமல் உள்ளனர்.

          மக்கள் நுதலிய அகனைந் திணையும்
         சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்*


          மற்ற   உயிரின் துன்பத்தைத் தம் துன்பம் போல் உணர
வேண்டும்    என்றும், அவ்வாறு உணராவிட்டால் அறிவினால் பயன்
இல்லை என்றும் திருவள்ளுவர் கூறுகின்றார்.


   * தொல்காப்பியம், பொருள், அகத்திணையியல், 55.