பொருள்களிடத்தும் ஒத்துணர்வு பிறக்கும்; உயிரில்லாப் பொருள் களிடத்தும் பிறக்கும். இதற்குச் சாதி சமயம் நிறம் மொழி நாடு என்ற வேறுபாடும் இல்லை; உயிருள்ளன இல்லன, உலகில் உள்ளன இல்லன என்ற வேறுபாடும் இல்லை. அதனால்தான் பாடும் பாட்டுகளில் அல்லது நாடகங்களில் வரும்கற்பனை மாந்தர்க்காகவும் கண்ணீர் வடிக்கின்றோம். சில பாட்டுகளில் மரமும் கல்லும் துன்புறுவதாக உணர்ந்து புலவர்கள் உருகுவதும் காண்கிறோம்; புலவர்களின் கற்பனை மாந்தர் உருகுவதும் காண்கிறோம்; கடலோடும் காற்றோடும் பேசித் துயருறுவதும் காண்கிறோம். புலவர் ஆணாக இருந்து, பெண்ணின் நெஞ்சம் உறும் துயரத்தைப் பாடுகிறார்; துறவியாக இருந்து, காதலரின் பிரிவாற்றாமையைப் பாடுகிறார்; முதியவராக இருந்து, இளைஞரின் உள்ளத் துடிப்பைப் பாடுகிறார். இவ்வாறே தம் வாழ்க்கையனுபவத்தில் உணராத உணர்ச்சிகளையும் பாடுமாறு உதவுவது இந்த ஒத்துணர்வே ஆகும். இவ்வாறு வேறுபட்ட-அனுபவத்தில் வராத-உணர்ச்சிகளை எல்லாம் புலவர் பெற இயலுவதற்குக் காரணம் என்ன? அடிப்படை உணர்ச்சிகளாகிய சில, எல்லார்க்கும்-எல்லாக் காலத்தார்க்கும் எல்லாப் பாலார்க்கும் எல்லா நாட்டார்க்கும்-பொதுவாக இருத்தலே காரணம் ஆகும்.* காலம் எவ்வளவு மாறினும் பசித்துன்பம், நீர் வேட்கை முதலியன மாறாதிருத்தல்போல், பிரிவாற்றாமை பெற்றுழி மகிழ்ச்சி முதலாய சில அடிப்படை உணர்ச்சிகள் எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் மாறாமல் இருந்துவரக் காண்கின்றோம். உணர்ச்சிகளுக்குக் காரணங்களும் வடிவங்களும் பற்பல ஆயினும், அவற்றின் அடிப்படைகளாக உள்ளவை இன்பம் துன்பம் என்னும் இரண்டே ஆகும். துறவியாரான புலவர் ஒருவர் காதலின் இன்பத்தையும் துன்பத்தையும் உணராவிடினும், நட்பின் இன்பத்தையும் துன்பத்தையும் உணர்ந்தவராக இருந்தால் தான், காதலரின்
* Some impulses remain the same, taking the same course on the same occasions, from age to age, from pre-historic times until today. -I.A.Richards, Principles of Literary Criticism p.191. |