வேண்டுகிறேன். என் காதலர்க்கு ஒரு தீமையும் இல்லை என்று நல்ல திசையில் நல்லன சொல்வாயாக" என நடுங்குகிறாள். திண்சுவர் நோக்கி நினைந்து கண்பனி ஐமென் தூவி அணைசேர்பு அசைஇ மையல் கொண்ட மதனழி இருக்கையள் பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி நல்ல கூறுஎன நடுங்கிப் புல்லென் மாலையொடு பொருங்கொல் தானே,* இவ்வாறு வருந்துவாள் என்று அவளுடைய துயரத்தைக் கற்பனை செய்து வெளியூரிலிருந்தவாறே நினைந்து வருந்துகிறான் காதலன். அதைக் கற்பனை செய்து உணர்ந்து பாடுகிறார் இளங்கீரனார் என்னும் புலவர். இது ஒரு பெண்ணின் உள்ளத்தை உணர்ந்து வருந்தும் ஆணின் உணர்ச்சியை ஆண்பாற் புலவர் ஒருவர் பாடியது. காதலனை முதலில் கண்டபோது காதலி மட்டும் தனியாக இல்லை; அவளோடு மற்றப் பெண்களும் இருந்தார்கள். எல்லோரும் கண்டது போலவே அவளும் கண்டாள். அவளுடைய உள்ளத்தில் மட்டும் அவனைப் பற்றிய காதல் வளர்ந்தது. ஒருநாள் தோழியிடம் தன் உள்ளத்தின் ஏக்கத்தைப் பற்றிக் கூறுகிறாள்: "தோழி! மலர் மாலை அணிந்த அழகிய தோற்றத்தோடு அன்று அவன் அங்கு நின்ற காட்சியைக் கண்டவர் பலர். அவர்களுள் யானும் ஒருத்தி. ஆனால் மற்றவர்கள் வருந்தவில்லை. யான் மட்டும் நள்ளிரவிலும் படுக்கையில் கிடந்து தனியே கண்ணீர் சொரிந்து வாடுவது ஏன்?" என்கிறாள். மலர்தார் மார்பன் நின்றோன் கண்டோர் பலர்தில் வாழிதோழி அவருள் ஆரிருள் கங்குல் அணையொடு பொருந்தி ஓர்யான்ஆகுவது எவன்கொல் நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே.** இவ்வாறு ஒரு பெண்ணுள்ளம் உணர்ந்த உணர்ச்சியைப் பாடியவர் புலவர் கபிலர். * அக. 289 ** அக.82. |