பக்கம் எண் :

78இலக்கியத் திறன்

Untitled Document

          அந்தக் காதல் வளர்கிறது. காதலர் கண்டு பழகுகின்றனர்.
ஆனால் இடையூறுகள் பல ஏற்பட்டுத் தடுக்கின்றன. பிரிவாற்றாமைத் 
துன்பம்     வளர்கிறது.   அதனால் காதலி வாடி மெலிகிறாள். தாய்
மகளுக்கு     ஏதோ நோய் வந்ததாக எண்ணி வருந்துகிறாள். காதலி
தன் தோழியிடம்    கூறுகிறாள்   "தோழி! அன்னைக்கு உண்மையை
அறிவிப்பதா    இல்லையா  என்று இரு பக்கமும் எண்ணி எண்ணித்
தடுமாறிய      மனம் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இந்த
வாடிய உடம்பிலிருந்து    என்   உயிரே நீங்குவதானாலும் சரி, என்
மெலிவுக்குக் காரணம் காதல் நோய் என்பதை மட்டும் அன்னைக்குச் 
சொல்லாதே" என்கிறாள்.

          அன்னைக்கு
         அறிவிப் பேங்கொல் அறியலங் கொல்லென
         இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால்
         சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை
         இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள்
         ஆய்மலர் உண்கட் பசலை
         காம நோயெனச் செப்பா தீமே.*


          பெற்ற தாயிடம் வாய் திறந்து காதல் நோயைச் சொல்லக் 
கூசும் பெண்  மனத்தை உணர்ந்து ஆண்பாற் புலவர் கபிலர் பாடிய
பாட்டு  இது.

         எருமைத்  தாய் காலையில் கன்றைவிட்டுப் பிரிந்து மேயச்
சென்றது.  மேய்ந்து  திரும்பும் வழியில் பகன்றைக் கொடிகள் இருந்த
புதரில்      கொம்புகளை இட்டுக் கிளறிய போது அந்தக் கொடிகள் 
சில கொம்புகளில் பின்னிக் கொண்டன. கொடிகளில் வெண்ணிறமான
பகன்றை மலர்கள்  இருந்தன. அவைகளுள் சில எருமையின் கொம்பு
களில் விளங்கின.    இத்தகைய   தோற்றத்தோடு எருமை தொழுவத் 
திற்குத் திரும்பி வந்து தன்  கன்றை  அணுகியது. அந்தக் கன்று தன்
தாயின்   தலையைக்  கண்டதும்,  புதுமையால்  மருண்டு,  தன்தாய்
அன்று என்று அஞ்சி விலகியதாம்.

          பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக்
         கருந்தாள் எருமைக் கன்று வெருஉம்.


       * அக. 52.