இப் பாட்டில் சின்ன எருமைக் கன்றின் உணர்ச்சியைப் புலவர் உணர்ந்து பாடியிருத்தல் காணலாம்.
உணர்ச்சிபாயும்சிறப்பு
ஒத்துணர்வு இவ்வாறு ஒருவர் உள்ளத்து உணர்ச்சி மற்றவர் உள்ளத்தில் பாயுமாறு-பதியுமாறு-செய்வது. கலையின் சிறப்பும் சிறப்பின்மையும் இதன் அளவினைக் குறித்தே என்று கருதுகிறார் டால்ஸ்டாய்.* 1. உணர்த்தப்படும் உணர்ச்சியின் சிறப்பியல்பு. 2. அந்த உணர்ச்சி சென்று பரவுதலில் உள்ள தெளிவு. 3. கலைஞரின் உள்ளத்தின் உண்மைத்தன்மையும் ஆற்றலும். இந்த மூன்றும் மிக்கு விளங்குவதாயின், ஒரு கலை உயர்ந்த கலையாக விளங்கும் என்றும், இந்த மூன்றும் அளவில் குறைந்து நிற்பின் கலையின் தரம் குறையும் என்றும் அவர் விளக்குகிறார். பண்பட்ட உள்ளம் ஒரு விலங்கு அல்லது விலங்கு போன்ற மனிதன் துன்ப உணர்ச்சி உற்றுக் கண்ணீர் வடிக்கவேண்டுமானால் அதன் உடம் பில் அல்லது அவன் உடம்பில் ஏதேனும் துன்பம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் இரக்கம் உள்ள மனிதன் கண்ணீர் வடிக்க வேண்டுமானால் அவனுடைய கண் கண்டாலே போதும். கலைப் பயிற்சி பெற்ற மனிதன் கண்ணீர் வடிக்க வேண்டுமானால் அவனுடைய உடலையோ மற்றோர் உடலையோ துன்பம் தாக்க வேண்டுவதில்லை கலைஞர் ஒருவர் படைத்த கற்பனையில் துன்பக் காட்சி ஒன்று அமைந்திருந்தால் அது போதும். * Art becomes more or lass infectious in consequence of three conditions: (i) in consequence of a greater or less peculiarity of the sensation conveyed; (ii) in consequence of a greater or less clearness of the transmission of the sensation; (iii) in consequence of the sincerity of the artist than is,of the greater or lesser force with which the artist himself experience the sensation which he is conveying. -Tolstoy, What is Art. xv. |