| காணுங்கால் ஓர் உடலில் இருந்து மற்றோர் உடலுக்குப் பாயும் வாழ்க்கையின் உணர்ச்சியைவிட, ஓர் உள்ளத்திலிருந்து மற்றோர் உள்ளத்திற்குப் பாயும் உணர்ச்சியே கலையில் அமையத்தக்க சிறப்புடையது எனத்தெரியலாம். துன்பமும் இன்பமும் கற்பனையுடையவர்க்கு மிக விரிவாக அமையும் எனலாம். பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தம் தம் உடலுக்கு நேரும் இன்பதுன்பங்கள் மட்டுமே உண்டு. தன் காலில் பட்டபுண் மட்டுமே பசுவுக்குத் தெரியும்; அதற்காக மட்டுமே பசு வருந்தும்; தன் கன்றின் காலில் பட்ட புண்ணுக்காக துன்புற அதனால் இயலாது. இன்பத்திலும் இந்நிலையே உள்ளது. மனிதர் இதனிலும் உயர்ந்த நிலையில் உள்ளவர். தாய் ஒருத்தி தன் வயிற்று நோய்க்கு வருந்துதல் போலவே, தன் குழந்தையின் வயிற்று நோயையும் உணர்ந்து வருந்துகிறாள். தன் உடலில் பட்ட புண்ணுக்காகத் துன்புறல் போலவே, தெருவில் செல்லும் ஒருவன் விழுந்து அடிப்பட்டபோதும் துன்புறுகிறாள். கலைஞரின் இன்பதுன்ப உணர்வு நிலை இதனினும் சிறந்தது. கலைஞர் கண்ணாற் கண்ட பிறருடைய இன்பதுன்பங்களை உறுதல் போலவே, கற்பனையில் படைக்கும் மாந்தர்களின் இன்பதுன்பங் களையும் உறுகின்றனர். ஆகவே, ஒருவகையில் உலகில் உள்ள எல்லா இன்பங்களையும் எல்லாத் துன்பங்களையும் கலைஞரின் உள்ளம் உணர்கின்றது எனலாம். மற்ற உயிர்களின் துன்பத்தைக் கற்பனை செய்யும் கலைஞர், உண்மையாகவே பிறர் துன்பம் கண்டு உருகும் அருளாளர் போல் இரக்கம் உடையவராகவே விளங்குகின்றனர். நாரை பற்ற முயன்றபோது ஒரு கெண்டை மீன் அதனிடமிருந்து தப்பித்துக்கொண்டதாம். பிறகு நீரில் மூழ்கி மேலெழுந்தபோது அதன் கண்ணெதிரே வெண்தாமரை அரும்பு ஒன்று தோன்றியதாம். அந்த அரும்பு நாரை போலவே தோன்றவே கெண்டைமீன் அஞ்சி ஓடியதாம். குருகுகொளக் குளித்த கெண்ட அயலது உருகெழு தாமரை வான்முகை வெரூஉம்...*
* குறுந்தொகை, 127 |