பக்கம் எண் :

82இலக்கியத் திறன்

Untitled Document

        முன்னிரவில் குஞ்சுகளோடு தாய்க் கோழி இருந்த இடத்தை
அடுத்து   வேலி பக்கமாகக் காட்டுப் பூனைகள் வந்தனவாம். அவை
வருதலை    அறிந்த  தாய்க்  கோழி எங்கே ஓடிப் புகுவது என்று 
அறியாமல்,    தன்   குஞ்சுகளை எல்லாம் கூடிச் சேர்ந்திருக்குமாறு
அழைத்துக் கொண்டதாம்.

       மனையுறை கோழிக் குறுங்கால் பேடை
      வேலி வெருகினம் மாலை யுற்றெனப்
      புகுமிடன் அறியாது தொகுபுஉடன் குழீஇப்
      பைதல பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்கு...**

        இவ்வாறே   மற்ற உயிர்களின் இன்பதுன்பங்களை எல்லாம்
உணர்ந்து பாடியுள்ளனர்.

துன்பமே மிகுதி

        இன்பத்தை பாடுவதைவிட துன்பத்தை பாடுவதில் புலவர்கள்
முனைந்துள்ளனர்.    காதலைப்  பாடும் புலவர்கள் காதலரின் இன்ப
நிலையை   பாடுதல் மிக குறைவாக உள்ளது. காதலரின் பிரிவாற்றாத்
துயரத்தைப் பாடுதலே மிகுதியாக உள்ளது. பழந்தமிழ் இலக்கியத்தின்
அகப்பொருள் பாட்டுகளிலும் பாலைத் திணைப் பாட்டுகளே பலவாக
இருத்தல்    காணலாம். முல்லையிலும் ஒரு வகைப் பிரிவே உள்ளது;
மருதத்திலும்    ஒரு வகைப்பிரிவே உள்ளது; நெய்தல் திணையிலோ
பிரிவாற்றாத்     துயரம்   எல்லையைக் கடந்து விடுகிறது; காதலரின்
கூட்டத்தைப் பற்றி பாடுதற்கு உரிய குறிஞ்சித் திணையிலும், காதலன்
குறித்த போது  வராமையால் நேரும் ஏமாற்றமும்,காதலியின் ஏக்கமும்
காதலன் வரும்   வழியில்    உள்ள இடர்ப்பாடுகளும் முதலியனவே
மிக்குள்ளன.   ஆங்கில இலக்கியத்தில் உள்ள காதல் பாட்டுகளிலும்
காதலரின் துன்பமும் துயரமுமே மிக பாடப்பட்டுள்ளன என்பர்.*


               

             ** குறுந்தொகை, 139

             * Love poets are but seldom the singers of happiness in love, and the greatest love-poet of our own
time,     Thomas  Herdy has given on expression that is
immortal to the intolerable anguish of this desiderium.

            -J.M. Murry, Discoveries,p. 15.