| இந்நிலைக்கு காரணம் என்ன? ஏக்கத்திலும் துன்பத்திலும் துயரத்திலுமே பாட்டுக்கு உரிய உணர்ச்சி மிகுந்து நிற்கிறது. மாறுதலுக்கு இடையே நிலைபேற்றையும் அலைவுக்கு இடையே அமைதியையும் அழிவுக்கு இடையே என்றும் உள்ள தன்மையையும நாடி ஏங்கி உணர்தலே பாட்டின் இயல்பாக உள்ளது.* கலைஞரின் அனுபவம் பண்பட்ட உணர்ச்சியை உடைய கலைஞர் மிகச் சிலர். அந்த ஒரு சிலரின் உணர்ச்சி அனுபவம் நன்கு புலப்படுவதற்கும் கலைகாரணமாக இருக்கிறது. அந்த ஒரு சிலருடைய அனுபவத்தை பலரும் பெற்றுப் பயன் பெறுவதற்கும் கலை ஒரு கருவியாக உள்ளது. அத்தகைய கலை இல்லையானால் உயர்ந்த உள்ள நிலையைப் பலர் பெற முடியாமலே போயிருப்பதோடு சிலருடைய உயர்ந்த அனுபவங் களும் பயனற்று கழிந்திருக்கும். மற்ற உயர்ந்த உள்ளங்களின் உணர்ச்சிகளை நாம் உணர்வதற்குப் பயன்படுவது ஒரு புறம்; நம் உள்ளத்து ஆழ்ந்த உணர்ச்சிகளே வெளிப்பட வழியின்றி அடங்கி கிடக்கின்றன. அந்த ஆழ்ந்த உணர்ச்சிகள் நம் வாழ்வின் அடிப் படையாக அமைந்திருந்தும். நாம் அவற்றை நன்கு உணராமலே கிடக்கின்றோம்.புலன்களால் உணரத்தக்க உலகத்திலிருந்து தப்பித்துக் கொள்வதும், நம்மிடமிருந்தே நாம் தப்பித்துக் கொள்வதுமே வாழ்க்கையாக உள்ளன. இந் நிலையிலிருந்து விழிப்புற்று, வாழ்க்கையை நன்கு உணரவும், நம் உள்ளத்து ஆழ்ந்த உணரச் சிகளை நன்கு உணரவும், கலைஞரின் உணர்ச்சி படைப்பு நமக்கு உதவுகிறது.** * I.A. Richards, Principles of literary criticism, p.228. ** It may make us from time to time a little more aware of the deeper, unnamed feelings which from the substratum of our being, to which we rarely penetrate; for our lives are mostly a constant evasion ourselves, and an evasion of the visible and sensible world. -T.S.Eliot., The Use of Poetry and the Use of of Criticism, p.155. |