| கலைஞர் கருவியாதல் கலையைப் படைக்கும் முயற்சி என்பது கலைஞர் கருவியாக அமைந்து பணிவுடன் குழைந்து நிற்றலே ஆகும். எல்லா வேளைகளிலும் கலைஞருக்கு படைப்புத் திறன் இருப்பதாகக் கூறல் இயலாது; எல்லா வேளைகளிலும் அவர்க்குக் கற்பனை வந்து அமைவதில்லை. எதிர்பாராத சில வேளைகளில் தான், அவருடைய உள்ளத்தில் கற்பனை ஊற்றெடுக்கும். அப்போது மற்ற வேளைகளில் இல்லாத புத்துணர்ச்சி பிறக்கும். கலைஞரே அறியாத புதிய உண்மைகள் ஒளி வீசும். ஏதோ ஒரு சக்தி தம்மை ஆட்கொள்வது போலவும் புதிய விளக்கங்களை அளிப்பது போலவும் அப்போது கலைஞர் உணரக்கூடும். அந்நிலையில் அவர் பெற்ற உணர்ச்சியை சொல்லாலோ, கல்லாலோ, ஒலியாலோ, வண்ணத்தாலோ, வடித்துக் காட்டுமாறு அவரது உள்ளத்தில் ஒரு தூண்டுதல் ஏற்படும். அதற்குப் பணிந்து அவர் உருவாக்குவதே கலையாகும். பாட்டைப் பாடும் போதுதான் பாடப்படும் பொருள் தெளிவாக அமையும் என்றும், பாடும் புலவருக்கும் முன்னதாக அப்பொருள் தெளிவுறத் தெரியாது என்றும் அறிஞர் பிராட்லே கருதுகிறார்.* ஏதோ ஒரு குழம்பிய நிலையில் அந்தப்பொருள் புலவர்க்குத் தெரிந்திருக்கும்; அவ்வளவே அன்றி, அதுபற்றிய தெளிவு இராது. பாடும்போது அவர் ஒரு கருவியாய் அமைய, பொருள் தானே வந்து உருக்கொள்கிறது. அதற்கு முன் இரண்டொரு சொற்கள், சொற்றொடர்கள், அவருடைய உள்ளத்தில் கருக்கொள்ளலாம். பாடும்போதுதான் அவை முழு உருவம் கொண்டு, பொருளைத் தெளிவாக்கும். பாட்டு அவர் வயத்தில் இல்லை. பாட்டின் வயத்தில் அவர் இருந்து, பாட்டு வடிவம் பெறுவதற்கு துணை செய்கிறார். பொற்கொல்லன் பொன்னைக் கொண்டு அணிகலன் செய்வது போன்ற தொழிலன்று அது. முல்லைக் கொடியின் அரும்பு தோன்றிப் போது ஆகி மலர்ந்து மணம் கமழ்வது போன்றது அது. ஆதலின் இன்னாரால் பாட்டு இயற்றப்பட்டது என்பதைவிட இன்னார் வாயிலாகப்பாட்டு அமைந்தது என்பதே மிகப் பொருந்துவதாகும். "நினைத்தவுடன் ஒரு பொருளைப் பற்றிச் செய்யுள் இயற்றுதல் என்பது வேறு, பாட்டு இயற்றுவது என்பது ஒரு தனித் * A.C. Bradley - Poetry for Poerty's sake. P.28 |