பக்கம் எண் :

86இலக்கியத் திறன்

Untitled Document

பொருந்தாது.    புலவரின்    கலையுணர்ச்சியும் அவ்வாறு வாழ்க்கை
உணர்ச்சியினின்று    வேறு பட்டதுதானா?    ஆய்ந்து நோக்கினால்,
நாடக    மேடையில்    நடிப்பவரின்   உணர்ச்சியைவிட,   நாடகம்
எழுதிய  புலவரின்  உணர்ச்சி ஆழ்ந்ததாக இருக்கவேண்டும் என்பது
தெளிவாகும்.   ஏன்எனில்   நடிப்பவர்,   நாடகம்   காணும்  மக்கள்
உணருமளவுக்குப்   புறத்தே   மெய்ப்பாடுகளைப்   புலப்படுத்துவதே
கடமையாகக் கொண்டிருக்கிறார்.  அவருடைய   உள்ளத்தில் சினமே
இல்லாமல்,  முகக்   குறிப்பிலும்   கைகால்   அசைவிலும் குரலிலும்
மட்டும்   சீற்றம்   இருப்பதுபோல்   காட்டுதல்   போதும். ஆனால்,
நாடகம்   எழுதும்   புலவர்   தம்   சினத்தை    மெய்ப்பாடுகளால் 
யாருக்கும்   புலப்படுத்த   வேண்டுவதில்லை.  அவர் தம் உள்ளத்தே
அந்த  உணர்ச்சியை  ஏற்படுத்திக்  கொள்ளுதலே  இன்றியமையாதது.
உள்ளத்தே     அந்த       உணர்ச்சியை     ஏற்படுத்திக்கொண்டு
அனுபவித்தால்தான்,     எழுதும்     நாடகத்தில்   அந்த மாந்தரை
(பாத்திரத்தை) நன்றாகக் கற்பனை செய்ய முடியும்.

           இன்னொரு   வகையாகவும் காணலாம். நாடகமேடையில்
மகனை   இழந்து   புலம்பும் தாயாக ஒருவர் நடிக்கும் பகுதி வரலாம்.
தாயாக   நடிப்பவர்  கண்ணீர் விடாமல் நடிக்கலாம். ஆனால் நாடகம்
பார்க்கும்  மாந்தரில்  உணர்ச்சி  மிக்கவர்கள் சிலர் கண்ணீர் விட்டுக் 
கலங்குவர்.   அவர்களின்   உணர்ச்சியளவிற்கேனும் நாடகம் எழுதிய
புலவர் உணர்ந்திருக்க  வேண்டும். உண்மையாக நோக்கினால், சிறந்த
நாடக   ஆசிரியரின்  அனுபவம் அதனை விடச் சிறிது மிகுதியாகவே
இருத்தல் வேண்டும் எனலாம்.

           வாழ்க்கையில்,  ஒருவன் பாலத்தின் மேலிருந்து ஆற்றில்
குதித்துத்     தற்கொலை   செய்துகொள்ள   முயல்வதாக இருந்தால்,
நாம் ஆ ஆ  என்று  அலறி அவனைத் தடுக்க முயல்வோம்; ஓடவும்
ஓடுவோம்.     ஆனால்     திரைப்படத்தில்   அவ்வாறு   ஒருவன்
செய்வதாகக்   காணின்,   இருந்த இடத்தை விட்டு எழுவதும் இல்லை.
நெஞ்சில்  மட்டும்   துணுக்கென்று  ஓர் உணர்ச்சி ஏற்படுகிறது. கதை
முதலியவற்றில்     படிக்கும்போதும்     அத்தகைய    உணர்ச்சியே
ஏற்படுகிறது.   ஆகவே,   வாழ்க்கையனுபவத்திற்கு அடுத்த நிலையில் 
கருதத் தக்க   அனுபவம்  கலைக்  கற்பனையில்  ஏற்படுகிறது எனக் 
கொள்ளல் வேண்டும்.