பக்கம் எண் :

உணர்ச்சி 95

Untitled Document

        கணவன் வெளியூர்க்குச் சென்றபோது, அவனுடைய வரவை 
எதிர்பார்த்து    ஏங்குதல்    அன்புடைய   மனைவியர் யாவர்க்கும்
அனுபவமான     ஒன்றே.    ஆயினும்   புலவர் ஒரு சிலரே அந்த
அனுபவத்தைப்    பாட்டு வடிவில் அழகுறப் படைத்துத் தந்துள்ளனர்.
மனைவி    ஒருத்தி    தான்   வளர்த்த  பைங்கிளியை முன்கையில்
ஏந்திக்கொண்டு,    வீட்டார்    யாரும்    அறியாதபடி  அதனோடு 
மெல்லப்   பேசுகிறாளாம்;   "கணவர் இன்று வருவார்  என்று சொல்;
கிளியே!     அவரைப்    பற்றிச்    சொல்"    என்று    மெல்லச்
சொல்கின்றாளாம்.     இவ்வாறு    பாடியுள்ளார்   மதுரை  மருதன்
இளநாகனார் என்ற புலவர்.

     செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி
     இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென
     இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
     மழலை இன்சொல் பயிற்றும் 
     நாணுடை அரிவை...1

          இளமையில்    பெற்றோரை  விட்டுப் பிரியாமல் வளர்ந்த
வளர்ச்சியும்,     பெற்றோருடன்   வாழ்தலே  வாழ்வு என்று இருந்த
நிலைமையும்  பலருடைய   நெஞ்சிலும்   நினைவு  மாறாமல் நிற்பன.
திருமணம்   ஆகிக்   கணவனும்   மனைவியுமாக  வாழும் இல்லறம்
ஏற்பட்ட பின்,  தனிக்குடும்பம்  நடத்தும்   நிலையில் பழைய வாழ்வு
நினைவுக்கு வருதலோடு,   இன்று   இணைந்து வாழ்வோர் இருவரும்
சில ஆண்டுகளுக்கு   முன் தொடர்பற்ற நிலையில் யார் யாரோ என
இருந்ததும்   நினைவுக்கு    வரும்.   உணர   வல்லவர்க்கு   இந்த
இல்வாழ்க்கையால்   ஏற்பட்ட    மாறுதல்   வியப்பை   விளைக்கும்.
ஆயினும்   புலவர்   ஒருவர்   பாடியுள்ள பாட்டைப் படிக்கும்போது,
அந்த வியப்புணர்ச்சி ஒழுங்குற   அமைக்கப்பட்டிருத்தல்  புலனாகும்.

     யாயும் ஞாயும் யார்ஆ கியரோ
     எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
     யானும் நீயும் எவ்வழி அறிதும்
     செம்புலப் பெயல்நீர் போல
     அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே2
_________________________________________________           1. அகநானூறு, 34.
          2. குறுந்தொகை, 40