பக்கம் எண் :

118தமிழியற் கட்டுரைகள்

பெயர்கள், அவரின் முன்னோர் நிலைமையைத் தெற்றெனக் காட்டாநிற்கும். முன்னர்க் கைக்கோளர் படை என்பது மரபாக வழங்கியதுபோன்று, இன்று கைக்கோளர் தறி என்பது மரபாக வழங்குகின்றது. கைக்கோளர் உயர் என்னுந் தலைப்பில் திவாகரம் கூறும்,

  "செங்குந்தப் படையர் சேனைத்தலைவர்
தந்துவாயர் காருகர் கைக்கோளர்"
 

என்னும் நூற்பா, கைக்கோளரின் பண்டை நிலைமையையும் இற்றை நிலைமையையும் ஒருங்கே உணர்த்தும். தந்துவாயார். காருகர் என்பன நெசவுபற்றி வந்த பெயர்கள். குந்தம் ஈட்டி, செங்குந்தம் குருதியாற் சிவந்த ஈட்டி.

     பண்டை வேளிருள்ளும் கோசருள்ளும் இருந்ததுபோன்றே, முறையே அவரின் மரபினரான வெள்ளாளருள்ளும் கைக்கோளருள்ளும் படைத்தலைவர் இருந்தமையின். இன்றும் அவ்விரு வகுப்பாரின் வழியினரும் குலத்தாரும், முதலியார் என்னும் பட்டத்துடன் அழைக்கப் பெறுகின்றனர். முதலியார் என்பது சேனை முதலியார் அல்லது படை முதலியார் என்பதன் குறுக்கம். முதலியார் இங்குத் தலைவர். வடகொங்கில் வதியும் அகம்படியர் தமக்கு முதலியார் பட்டம் இட்டுக்கொண்டது பிற்கால வழக்கு. தஞ்சை மாவட்டத்தில் சமணர்க்கு வழங்கும் முதலியார் பட்டம் படைத் தொடர்பின்றிப் பொதுவாகத் தலைவர் அல்லது பெரியோர் என்று பொருள்படுவதே.
     கோசரும் கைக்கோளரும் ஒரு வகுப்பாரே என்று முதன்முதற் கூறியவர் பெரும்புலவர் ரா. இராகவையங்காரே. கோசர் தமிழரா வேற்று நாட்டரா என்பதுபற்றி மட்டும் கருத்துவேறுபாடுள்ளது. கழகக் காலத்துக் கோசரும் வேளிரும் வடநாட்டின் வெவ்வேறு பகுதியினின்று தென் னாட்டுப் புகுந்தவர் என்பது அவர் கொள்கை. தென்னாட்டுப் பழக்க வழக்கங்கள் வடநாட்டிற் கையாளப்பெற்றமையே. அவர், அங்ஙனம் தலைகீழான முடிபிற்கு வரக்காரணம். தென்னாட்டு மாந்தர் வடநாட்டாரினும் முற்பட்டவர் என்பதை அறிந்திருப்பின், அவர் அங்ஙனம் கொண்டிரார். வடநாட்டிற் கண்ணபிரான் நப்பின்னையை ஏறுதழுவி மணந்ததும், காளிக் கோட்டத்தில் (Calcutta) காளிக்கு எருமைக் கடாவைக் காவு கொடுத்ததும், தென்னாட்டு (தமிழ்நாட்டு) வழக்கங்களே. அங்ஙனமே காசுமீரத்தார் கோச முறையில் சூளிட்டதும் தென்னாட்டு வழக்கமே. ஆதலால், அதுபற்றிக் கோசரை வடநாட்டினின்று வந்தவர் என்று கொள்வது வரலாற்று மலைவாம்.
     இதுகாறுங் கூறியவற்றால், கடைக்கழகக் காலத்தில் உலக வழக்கில் 'கோளர்' என்றும், செய்யுள் அல்லது இலக்கிய வழக்கில் 'கோசர்' என்றும், இடைக்காலத்திலும் இக்காலத்திலும் இருவகை வழக்கிலும் கைக்கோளர் என்றும், செங்குந்தர் என்றும், பெயர் வழங்கப்பெற்றவர் ஒரு வகுப்பாரே