மழல் - மழறு. மழறுதல் = மென்மையாதல், "மழறு தேன் மொழி யார்கள்" (திவ். திருவாய். 6:2:5). |
மழ - மாழை = 1. இளமை. "மாழை மடமான் பிணையியல் வென்றாய்" (கலி.131). 2. அழகு. "மாழைநோக்கொன்றும் மாட்டேன் மினே" (திவ். திருவாய். 2:4:10). 3. பேதைமை. "மாழை மென்னோக்கி (திருக்கோவை, 61). |
மழ-மக=1. இளமை. (யாழ்.அக.). 2.பிள்ளை "மந் திம்மக" (சீவக.18) |
3. மகன் அல்லது மகள். "மக முறை தடுப்ப" (மலைபடு. 185)க.மக. |
மக - மகவு = 1. குழந்தை. "மகவுமுலை வருட" (கம்பரா. தைல. 13) 2. மகன், "கொண்டதோர் மகவினாசை" (அரிச். பு. மயான, 20). 3. குரங்குக் குட்டி. (தொல். மர. 14). க. மகவு (g) |
மக-மகன், க, மகம்(g) மக - மகள், ம. க. - மகள் (g) |
mac (mak). a Gaelic word signifying son, and prefixed to many surnames, as Mac Donald, Mac Grigor & c. It is synonymous with son fem, in names of teutonic origin. It is allied with Goth. magus, a son. magattes (G. magd, a maid)'' - The Imperial Dictionary of the English Language (Vol.III, p.91). |
முள் - (முர்) - முருகு = 1. இளமை. (திவா). 2. அழகு. (பிங்). 3. முருகன். "அருங்கடி வேலன் முருகொடு வளைஇ" (மதுரைக்.611). 4. தெய்வம். "முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல" (புறநா.259). 5. வேலன் வெறியாட்டு "முருகயர்ந்து வந்த முதுவாய் வேலன்" (குறுந். 362). 6. முருகன் திருவிழா. "முருகயர் பாணியும்" (சூளா, நாட்.7). |
முருகு - முருகன் = 1. கட்டிளமையோன். (திவா). 2. முருகதேவன். |
3. வேலன் வெறியாட்டாளன். "முதியாளோடு முருகனை முறையிற் கூவி" (கந்.பு. வள்ளி 155) |
இளமைக்குரிய பண்பு அழகும் மறமும், முதற்காலக் குறிஞ்சிநில வாணர் பிற்காலப் பாலை நிலவாணர் போன்றே கடு மறவராயிருந்தனர். அதனால் தம் தெய்வம் இளமையும் மறமும் அழகும் உடையோன் என்று கருதி, முருகன் என்று பெயரிட்டனர். அழகுக் கருத்தினும் இளமைக் கருத்தே முந்தியது. ஆயின், திரு.வி.க. தம் "முருகன் அல்லது அழகு" என்னும் கட்டுரையில் அழகுக் கருத்தையே முந்தியதாக அல்லது முதன்மையானதாகக் கொண்டார். |
முரு - முருந்து = 1. கொழுந்து (சங்.அக.) இளந்தளிர், (அரு.நி.). |
2. தென்னை பனை முதலியவற்றின் வெண்குருத்து (சூடா). |
முரு - முறு - முறி = தளிர். "முறிமேனி" (குறள். 1113). |
| முறி - மறி = விலங்கின்குட்டி. "பார்ப்பும் ....... மறியும் என்று ...... இளமைப் பெயரே." (தொல். மர.1). |