பக்கம் எண் :

122தமிழியற் கட்டுரைகள்

     மரஞ்செடி கொடிகள் அடர்ந்தும் அடிக்கடி மழை பொழிந்தும் இருண்டும் குளிர்ந்தும் இருந்த குறிஞ்சியில், ஒளி பெறவும் குளிர் போக்கவும் மட்டுமன்றி, கிழங்கு சுடவும் கொடுவிலங்கைத் துரத்தவும், நெருப்பு இன்றியமையாததா யிருந்ததினால், அவ்வப்போது மரங்கள் உரசி இயற்கையாகத் தோன்றும் நெருப்பைத் தம் தெய்வ வெளிப்பாடாகக் கருதி, குறிஞ்சி நில மக்கள் முருகனுக்குச் சேயோன் (சிவந்தவன்) என்று பெயரிட்டதாகத் தெரிகின்றது. தங்களைப்போல் வேற்படை யுடையோன் என்றும், குறிஞ்சிநிலக் கடப்பமாலை யணிவோனென்றும் கருதி வேலனென்றும் கடம்பனென்றும் பெயரிட்டனர். அரசன், வேந்தன் என்னும் பெயர்கள் ஈறுகுன்றி அரசு, வேந்து என்று வழங்குவது போன்று, சேயோன், முருகன் என்னும் பெயர்களும், முறையே, சேய், முருகு என இலக்கியத்தில் வழங்கும்.

2. முருகன் முன்மை (வணக்க நிலை):

     முதற்காலத் திணைநிலைத் தெய்வ நூற்பாவில் "சேயோன் மேய மைவரை உலகமும்" என்று தொல்காப்பியர் முருகனையே குறிஞ்சி நிலத் தெய்வமாகக் குறிக்கின்றார்.
     குமரிநாட்டில், முதற்காலத்தில், முருகன் குறிஞ்சி நிலத்திற்கே சிறப்பாக வுரிய தெய்வமாக, அறுவடையும் திருமணமும் போன்ற இன்பக் காலத்திலும், நோயும் பஞ்சமும் போன்ற துன்பக் காலத்திலும், அவ்வப் போது இம்மைப் பயன் நோக்கியே, மதுரை வீரனும் எல்லையம்மனும் போல வணங்கப்பட்டான்.
     பிற்காலத்தில் ஐந்திணை வாழ்க்கை யேற்பட்டபின், வெறியாடும் வேலனாலும், குறி கூறும் குறத்தியாலும் முருக வணக்கம் மருதநிலத்தில் புகுந்தது.
3. சிவன் பின்மை (மத நிலை):
     மருத நிலத்து மக்கட் பெருக்காலும் நாகரிக வளர்ச்சியாலும், உழவு, வாணிகம் காவல் கல்வி என்னும் நால்வகைத் தொழிலும், வேளாளர், வணிகர், அரசர், அந்தணர் என்னும் நால்வகைத் தொழில் வகுப்பாரும் தோன்றியபின், மறுமை நோக்கும் மத வுணர்ச்சியும் ஏற்பட்டு, குறிஞ்சி நிலச் சேயோன் வணக்கத்தினின்று சிவமதமும், முல்லை நில மாயோன் வணக்கத்தினின்று திருமால் மதமும் தோன்றின.
     ஆயின், சிவன் சேயோனினும் வேறுபட்டவனென்றும், இளமை நீங்கிய நடுப் பருவத்தானென்றும், சிவை அல்லது மலைமகள் என்னும் தேவியுடையனென்றும், காளையூர்தியனென்றும், தில்லை மன்றாடி யென்றும், வீட்டின்பந் தருபவனென்றும், மறைகளாற் போற்றவும் மெய்ப் பொருள் நூல்களால் ஆயவும்படுபவனென்றும், நிலையான கருத்துகள் எழுந்துவிட்டன.