பக்கம் எண் :

முருகு முதன்மை123

     ஆரியப் பூசகர் முருகனை மகனாகவும் சிவனைத் தந்தையாகவும் இருவரையும் ஆரியத் தெய்வங்களாகவும் காட்டி, பல தொன்மங்களையும் (புராணங்களையும்) தீட்டி விட்டனர். இதனால் அத் தெய்வங்களின் உருவத் தோற்றமும் வழிபாட்டுமுறையும் மிக மாறிவிட்டன.

     சேய் என்னுஞ் சொல்லிற்கு முருகன் குழந்தை, என்று இருபொரு ளிருப்பதும், இளைஞனைக் குறிக்கும் குமரன் என்னுஞ் சொல் வடமொழியில் குமார என்று திரிந்து மகனைக் குறிப்பதும், தொன்மிகர்க்குத் (புராணிகர்க்குத்) துணையாயின.
4. சேயோனுக்கும் சிவனுக்குமுள்ள ஒற்றுமை:-
     சிவனுஞ் சிவையும் பெற்றோர் போன்றும், முருகனும் வள்ளியும் மகனும் மருமகளும் போன்றும், தோற்றமளிப்பினும், முருக வழிபாட்டில் தனிப்பற்றுள்ளவர், முருகனுஞ் சிவனும் ஒன்றேயென்று கொள்ளற்கேற்ற ஒற்றுமைச் சான்றுகளையுங் கண்டுள்ளனர்.
  (1) இருவருக்கும் நெருப்புப் பூத அடிப்படையில், சேயோன் என்றும் சிவன் அல்லது செய்யவன் (செய்யோன்) என்றும் பெயர் தோன்றியுள்ளமை. இதனால் சிவாயநம என்பது முருகனுக்கும் ஏற்கும்.
  (2) இருவருக்கும் மலைக்கோயில்கள் சிறப்பிருக்கையா யிருக்கை.
  (3) இருவர் ஊர்திகளும் படைக்கலங்களும் மலரணிகளும் குறிஞ்சி நிலத்திற் குரியனவாயிருத்தல்.
  (4) இருவர்க்கும் முகங் கண் கைகள் முப்பதாய் முடிகை.
  (5) முருகனும் வீடளிப்பவனாகத் திருமுருகாற்றுப்படை கூறல்.
  (6) இருவரையும் நான்முக திருமாலர்க்கு மேலவராகக் கதைகள் விளம்பல்.
  (7) சிவனியக் கொண்முடியும் (சித்தாந்தமும்) மெய்ப் பொருட் கோவையும் முருகனுக்கும் ஏற்றல்.
  (8) இருவரும் அகத்தியற்குத் தமிழாசிரியராகச் சொல்லப்படுதல்.
  (9) வள்ளி குறிஞ்சி நிலத் தேவியாதலால், மலைமகள் என்னும் பெயர் அவளுக்கும் பொருந்தும். மலைமகள் = மலைத்தேவி.
  (10) முல்லை நிலத்து மாயோன் என்னும் வணக்கநிலைத் தெய்வம் மதநிலைத் தெய்வமாக (பெருந்தேவனாக) மாறியபோது, முருகனுஞ் சிவனும் போன்றே வேறுபாடு ஏற்படவில்லை.
5. முருகன் கவர்ச்சி:
     இயற்கை வளஞ் சிறந்த குறிஞ்சி நிலத்தில், இளமையும் அழகும் இணைந்த முருகனும் வள்ளியும், அரசருங் காண விரும்பும் அழகிய