பக்கம் எண் :

மாந்தன் செருக்கடக்கம்127

4 நாற்றமின்மை
     மாந்தன் நாள்தொறும் மூவேளையும் முழுகிக் குளித்தாலும் சவர்க்காரமிட்டுத் தேய்த்தாலும், சாந்தமும் சுண்ணமும் பூசினாலும் வியர்வை நாற்றம் அவனைவிட்டு விலகுவதில்லை. பல விலங்குகளும் பறவைகளும் பன்னாட் குளியாதிருப்பினும், அவற்றின் உடலம் தீ நாற்றம் தருவதில்லை.
5. எச்சிலன்மை:
     கலத்தில் அல்லது இலையில் படைக்கப்பட்ட உணவுப் பண்டங்கள் மாந்தன் கைபடினும் எச்சாம். ஆயின் அணிலுங் கிளியும் கடித்த காய் கனிகளும், ஈயும் எறும்பும் மொய்த்த உண்டிவகைகளும், நாய் கௌவிய வேட்டையுயிரிகளும் எவர்க்கும் ஏற்பாம்.
  "... ... ... ... .... ... ... நாய் கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு"

(36)

என்பது பழமொழிச் செய்யுள்

     இனி, மாந்தன் கைபடினும் விரைந்து கெடும் கண்ணுறையும் (மசாலையும்) கறிவகைகளும், கோழி, குருவி முதலிய சில பறவைகளும் ஆடு, மாடு முதலிய சில விலங்குகளும் வாய் வைப்பினும் கெடுவதில்லை.
6. தீட்டன்மை:
     அரசன் இறப்பினும் இழவு கேட்கச் செல்பவர்க்குத் தீட்டாம். ஆயின், செத்த விலங்குகளையும் பறவைகளையும் பார்ப்பின் எவருக்கும் தீட்டில்லை.
7. கழிபொருள் தூய்மை:
     மாட்டின், சிறப்பாக ஆவின், சிறுநீரும் சாணமும் நிலத்தையும் தளத்தையும் துப்புரவாக்கும் கருவிகளாக மட்டுமன்றி, இருபால் மக்கட்கும் தீட்டுக் கழிக்கும் திருப்பொருள்களாகவும், இத் தேயத்தில் தொன்றுதொட்டு ஆளப்பெற்று வருகின்றன.
     புலம்பனின் (ஆன்மாவின்) மும்மலத்தையும். போக்குவதாகக் கருதி, சிவநெறியாரால் மேனிமுழுதும் பூசப்பெறும் திறுநீறு, ஆவின் எருச் சாம்பலே. இனி, சிவனடியார் மட்டுமன்றிச் சிவபெருமானும் திருநீறு பூசுவதாகச் சொல்லப்பெறும். "பூசுவதும் திருநீறு" என்றார் மாணிக்கவாசகர் (திருச்சாழல்). ஆவின் பால், தயிர், நெய், சிறுநீர், சாணம் ஆகியவற்றின் கலவையாகிய ஆனைந்து (பஞ்சகவ்வியம்) சிவன் கோயில்களில் தெய்வச்சிலைத் திருமுழுக்கிற்குப் பயன்படுத்தப்பெறுகின்றது. திருமால் நெறிப் பெண்டிர் சிலர் பிள்ளைப்பேற்றுத் தீட்டுக் கழிக்க ஆனைந்து உட்கொள்வதாகவும் சொல்லப்படுகின்றது.